Advertisment

“நீட்தேர்வு பெயரால் நடைபெறும் தற்கொலைகளுக்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” - செல்வப்பெருந்தகை!

Selvapperundhagai says Union Govt should be held responsible for NEET exam related issue 

சென்னையை அடுத்துள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அதன்படி இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் கட் ஆப் மார்க் வராததால் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தேவதர்ஷினி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. இத்தககைய சூழலில் தான் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தேவதர்ஷினி அவருடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தேவதர்ஷினி என்ற மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எப்படியாவது மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவை இத்தேர்வு முறைகள் தகர்த்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தன்னுயிரை மாய்த்துக் கொள்வது மிகவும் வேதனையாக உள்ளது.

Advertisment

நீட் தேர்வு என்னும் கொடிய அரக்கனுக்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டுமோ? நீட் தேர்வு நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காமல் இருக்கும் ஒன்றிய அரசுதான் நீட்தேர்வு பெயரால் நடைபெறும் தற்கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், ‘ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது’ என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுகவிற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?.

மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?. தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்? மாணவி தர்ஷினி மரணத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசே முழு பொறுப்பு. எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Selvaperunthagai student neet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe