ADVERTISEMENT

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் குறித்து செல்வப்பெருந்தகை தகவல்!

07:55 PM Mar 21, 2024 | prabukumar@nak…

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

இதனையொட்டி தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகள் முடிவுற்றுள்ளன. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் ஒப்பந்தமாகி இருந்தன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை செல்வப்பெருந்தகை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை (22.03.2024) காலை 10 மணிக்கு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT