Selvaperundhai says I warn the governor

தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு எதிர்கட்சியைச் சார்ந்தவரைப் போல அவர் தொடர்ந்து பேசுவாரேயானால், அவர் சுற்றுப்பயணம் செய்கிற இடங்களிலெல்லாம் தமிழக மக்கள் திரண்டெழுந்து முற்றுகை போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக ஆளுநரை எச்சரிக்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தாவின் பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பேசும் போது, ‘சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதிதிராவிட மக்களை ஒரு தீய சக்தி பிளவுபடுத்தி வைத்திருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

Advertisment

தமிழகத்தை பொறுத்தவரை நீண்ட நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதி பெற்றுத் தருவதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அரசமைப்புச் சட்டம் 1950இல் அமலுக்கு வந்தவுடனே கம்யூனல் ஜி.ஒ. செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய போது, அதற்கு எதிராக திருச்சியில் போராட்டம் நடத்தியவர் தந்தை பெரியார். அந்த போராட்ட உணர்வை பண்டித நேருவிடம் பெருந்தலைவர் காமராஜர் எடுத்துக் கூறி, அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது. இன்றைக்கு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அந்த பெருமை தமிழகத்தையே சாரும்.

Advertisment

அப்படிப்பட்ட வரலாறு படைத்த தமிழகத்தை ஒரு தீயசக்தி பிளவுபடுத்தி வைத்திருக்கிறது என்று ஆளுநர் யாரை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஏற்கனவே மோகன் பகவத் அரசமைப்புச் சட்டத்தினால் எந்த பயனும் இல்லை என்று பேசி சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தியதை எவரும் மறந்திட இயலாது. அந்த கருத்தின் அடிப்படையில் தான் சமூகநீதியையும், சமத்துவத்தையும், ஆதிதிராவிட மக்களுக்கு வழங்குகிற அரசமைப்புச் சட்டத்தையும், டாக்டர் அம்பேத்கரையும் மறைமுகமாக ஒரு தீயசக்தி என்று ஆர்.என். ரவி குறிப்பிடுவதாகத் தான் கருத வேண்டியிருக்கிறது. இத்தகைய நான்காம் தர, காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியலைப் பேசி வருகிற ஆர்.என். ரவி, ஆளுநர் பதவிக்கே தகுதியற்றவர் என்பது நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாராயண குருவைப் பற்றி பேசுகிற ஆளுநர், திருவள்ளுவர், வள்ளலார், தந்தை பெரியார் பெயரை உச்சரிக்க மறுக்கிறார். ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் தமிழக முதலமைச்சராக வர வேண்டுமென்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பு வகித்து வருகிறார். அதற்கு முன்பும் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பலர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் தலித் சமுதாயத்தைச் சார்ந்த நான் தலைவராக இருக்கிறேன். அகில இந்திய பா.ஜ.க. தலைமையையோ, தமிழக பா.ஜ.க. தலைமையையோ ஒரு தலித்துக்கு வழங்க ஆர்.என். ரவி பரிந்துரை செய்வாரா?. அல்லது குறைந்தபட்சம் தமிழக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அந்த பதவிக்கு ஒரு தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரை நியமிக்க பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்வாரா?. ஊருக்கு உபதேசம் செய்கிற ஆளுநர் ஆர்.என். ரவி, இதையெல்லாம் செய்ய முன்வருவாரா?.

Advertisment

Selvaperundhai says I warn the governor

தமிழக ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டப்படி பதவி வகிப்பவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மக்களால் தேந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் அறிவுரை இல்லாமல் எந்த செயலையும் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அப்படியிருக்கும் போது தமிழக அரசுக்கு எதிராக நாள்தோறும் ஒரு எதிர்கட்சித் தலைவரைப் போல கருத்து தெரிவித்து வருகிறார். தமிழக ஆளுநர் மாளிகை என்பது, தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாறி வருவதை தமிழக மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். பொது மேடைகளில் சராசரி அரசியல்வாதியைப் போல தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு எதிர்கட்சியைச் சார்ந்தவரைப் போல அவர் தொடர்ந்து பேசுவாரேயானால், அவர் சுற்றுப்பயணம் செய்கிற இடங்களிலெல்லாம் தமிழக மக்கள் திரண்டெழுந்து முற்றுகை போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக ஆளுநரை எச்சரிக்கிறேன்.