Skip to main content

“விஷம் கொடுத்து கொல்பவர்களும் உள்ளனர்” - பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Sellur Raju who severely criticized the BJP

இரண்டு நாள் சுற்றுப் பயணமாகத் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பிரதமர் மோடியையும் பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதில் அவர், “வெல்லம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள். விஷம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள். அதிமுக தலைவர்களை உயர்த்தி பேசினால் பா.ஜ.க.வுக்கு வாக்கு கிடைக்கும் என பிரதமரே நினைக்கிறார். பா.ஜ.க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது. ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை எட்டியுள்ளது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 15 லட்சம் கொடுப்போம் என்று பிரதமர் கூறினார். வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறினார்கள். ஆனால் பா.ஜ.க எதுவுமே செய்யவில்லை. தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் தர ஒன்றிய அரசுக்கு மனமில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தேசியக் கட்சிகள் புறக்கணிக்கின்றன. தமிழர் உரிமை, மொழிதான் முக்கியம் என்று பா.ஜ.க கூட்டணியை முறித்து தைரியமாக எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.