Sellur Raju says don't confuse us about AIADMK-BJP alliance

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்றொருபுறம் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

Advertisment

எரிகிற எரிப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (N.D.A- என்.டி.ஏ.) மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாஜக - அதிமுகவின் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், ‘எப்போதும் அதிமுக தலைமையில் தானே கூட்டணி அமையும். தற்போது என்ன தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று அமித்ஷா பேசுகிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்த வித மறுப்பும் இல்லாமல் இருக்கிறது’ என்று சொந்த கட்சியினரே குழப்பத்தில் இருக்கின்றனர்.

Advertisment

அவ்வப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் தமிழக்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிதான் என்று கூறி வந்தாலும், தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர், 2026 கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன். பாஜக ஆட்சிதான் அமையும் என்று கூறினார். இது அதிமுகவினரிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “கூட்டணி ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியா? என்பது குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியதும், தேர்தல் கூட்டணி குறித்தும் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார்” என்றார்.

Advertisment