ADVERTISEMENT

செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் 2000 பேர் மீது வழக்குப்பதிவு!

09:02 AM Mar 16, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து,அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் சிவகங்கையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் மற்றும் கட்சியின் பொதுக்கூட்டம் ஓரிரு தினங்கள் முன் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அமமுக கட்சித் தொண்டர் ராஜேஸ்வரன், பழனிசாமி சென்ற அதே விமானத்தில் பயணம் செய்தார். பழனிசாமியை பார்த்து கோபமடைந்த அமமுக கட்சியின் தொண்டர் ராஜேஸ்வரன், எடப்பாடிக்கு எதிராக முழக்கமிட்டு வீடியோ பதிவு செய்தார். இதனைக் கண்ட பழனிசாமியின் பாதுகாவலர், ராஜேஸ்வரனிடம் இருந்து அவரது செல்போனை பறித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடன் போய்க்கொண்டு இருப்பது எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டுள்ளேன். அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்; சசிகலாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்நாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்” என்றார். அமமுக தொண்டர் பழனிசாமிக்கு எதிராக வீடியோ எடுத்து பேசிய தகவல் அதிமுகவினருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்த ராஜேஸ்வரனை அதிமுகவினர் சரமாரியாகத் தாக்கினர். இந்நிலையில் பழனிசாமிக்கு எதிராக பேசியவர் குறித்து விசாரித்த போது அவர் அமமுகவின் வெளிநாடு வாழ் மக்கள் தொடர்பு பிரிவின் சிவகங்கை மாவட்டச் செயலாளராக உள்ளார் என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரன் மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் ராஜேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ராஜேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து சேலம், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. எடப்பாடி பழனிசாமி மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மதுரையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அனுமதியின்றியும் கூட்டம் நடத்தியதாக ஏறத்தாழ 2000 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் மீதும் வழக்கு பாய்ந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT