sellur raju press meet in madurai

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் தமிழக அரசைக்கண்டித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்அரசு வழக்கறிஞர் பழனிசாமி, மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், செல்லூர் ராஜு நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று (11-01-24) மதுரை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார்.

Advertisment

அப்போது அவர், “நான் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உண்மையைத்தான் கூறினேன். ஆனால், என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். அரசின் நிலை குறித்து தான் பேசினேன். நான் பொதுவாழ்வுக்கு வரும்போது திமுக தொடர்ந்த கொலை வழக்கிலேயே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அந்த வழக்கில் குற்றமற்றவன் என நிரூபித்து விடுதலையானவன் நான். அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு ஜுஜுபி. பொதுவாழ்க்கைக்கு வந்த பின்பு, வழக்குகளை பார்த்தெல்லாம் அதிமுக காரர்கள் பயப்படமாட்டார்கள்.

தமிழக மக்கள் நாள்தோறும் நான் ஆர்ப்பாட்டத்தில் பேசியதைத்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், நான் மேடையில் பேசியதால் என் மீது அவதூறு வழக்கு போடுகிறார்கள்” என்று கூறினார். இதனைத்தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை கோரிய வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “நாங்கள் புலி வேட்டைக்கு செல்கிறோம். எலி வேட்டையை பற்றி பேசாதீர்கள்” என்று கூறிச் சென்றார்.

Advertisment