Sellur Raju praises minister Sekarbabu

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு, ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக அவர் 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று (07-11-23) நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

Advertisment

அதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில், மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறை கலைத்து விடமுடியுமா?. பெரிய கோவில்கள் தரும் வருவாயில் தான் சிறிய கோவில்களும் இயங்கி வருகின்றன.

அண்ணாமலை எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.இந்த துறை எங்களுடைய ஆட்சியில் நன்றாக செயல்பட்டு வந்தது. இப்போது கூட அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு நன்றாக தான் செயல்பட்டு வருகிறார். அந்த துறையில் எந்தவித குறைபாடும் இல்லை. அந்த துறையில் ஏதாவது தவறுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டலாம். ஆனால், அதற்காக அந்த துறையே இருக்கக்கூடாது என்று சொன்னால் அது அவருடைய கருத்து” என்று கூறினார்.