Skip to main content

“திமுகவுக்கு ஆதரவு அளிக்கத் தயார்...” - சீமான் பரபரப்பு 

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

Seeman says Ready to support DMK

 

கரூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கரூர் வந்தார். அப்போது கரூரில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவர், “கோடநாடு விவகாரத்தில் கார் ஓட்டுநரின் அண்ணன் அளித்த பேட்டி காலதாமதம் என்றாலும் அது வரவேற்கத்தக்கது. இவரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார். துணிந்து அவர் சொல்வதை வைத்து உடனடியாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுகிறார். நேர்மையாளர் என்றால் அனைத்தையும் பேச வேண்டும். கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவை கறை படியாத புனித கட்சியாகவே காட்டிக்கொள்கிறார்.  கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை நான் வரவேற்கிறேன்.

 

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது 2 மாதத்தில் கோடநாடு கொலை வழக்கு மீது விசாரணை நடத்தி நீதியை பெற்று தருவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து தற்போது இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அதுபற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அது குறித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

நீட் தேர்வை கொண்டு வந்தது தற்போது இருக்கக்கூடிய இந்தியா கூட்டணிதான்.  நீட் தேர்வு வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடி வென்றவர் நளினி சிதம்பரம் தான். அந்த கட்சியை ஏன் இன்னும் கூட்டணியில் வைத்துள்ளீர்கள்? 18 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்தபோது கச்சத்தீவை மீட்காத நிலையில் தற்போது மீட்க வேண்டும் என்று திமுகவினர் சொல்கிறார்கள். இந்திய இறையாண்மை, தேசிய ஒற்றுமை பற்றி பேசும்போது தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸும், பா.ஜ.க.வும் கர்நாடகா என்று வரும்போது மாநில கட்சிகளாக மாறிவிடுகின்றன.

 

தமிழகத்திற்கு உரிய நதி நீரை பங்கீடு செய்யாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று முதல்வர் கூறுவாரா?  ஜெயலலிதா இருந்திருந்தால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தரவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கமாட்டார். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறேன். மேலும், இஸ்லாமிய சிறைக் கைதிகளை வெளியேற்றினால் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் இருந்து நாங்கள் விலகிக்கொண்டு திமுகவுக்கு துணையாக இருப்போம்.

 

அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடு வழக்கில் அப்போதே நடவடிக்கை எடுக்காமல் இப்போது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இது அரசியல் பழிவாங்கும்  நடவடிக்கை. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சிறையில் இருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அ.தி.மு.க 6 முன்னாள் அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு இருந்தும் அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அதைப் பற்றி அண்ணாமலை பேசுவது கிடையாது. ஏனென்றால் அவர்கள் பா.ஜ.கவோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்