Seeman introduced the candidate in the Erode by-election for ntk

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

Advertisment

வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி என்கிற மேனகா போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா போட்டியிடுவார். மொழிப்பற்று, இன பற்று கொண்ட பெண். அதனால் இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடுமையான உழைப்பை இத்தொகுதியில் நாங்கள் கொட்டுவோம். எங்களால் முடிந்தது அதுதான். எங்களது பலவீனம் என்ன என்று எங்களுக்குத் தெரியும். எங்களிடம் பணம் இல்லை. எங்களது பலம் என்பது கடுமையான உழைப்பு. கடுமையாக உழைத்து எங்கள் வேட்பாளரை வெல்ல வைப்போம்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வேட்பாளர் மேனகா, “இளங்கலை ஆடை வடிவமைப்பு படித்துள்ளேன். நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை துணைச் செயலாளராக உள்ளேன்”எனக் கூறினார். எதை முன்வைத்து பிரச்சாரம் செய்வீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சீமான், “ஒன்று இரண்டு பிரச்சனைகளா உள்ளது. அனைத்து பிரச்சனைகளும் எங்கள் பிரச்சனை தான்” எனக் கூறினார்.