The second state conference of the DMK youth team on December 17 

திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி திமுக இளைஞரணி அமைப்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

இதில் அமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “திமுக இளைஞரணி இன்று ஆதிக்கவாதிகளை விரட்டியடிக்கும் கொள்கைப் பாசறையாகவும், தமிழர்களின் உரிமை காக்கும் போராட்டத்தில் களமாடும் போர்ப்படையாகவும் உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புற நடத்தினார். அதே போன்று விரைவில் நடைபெற உள்ள இரண்டாவது மாநில மாநாட்டில் 10 லட்சம் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்ய உறுதியேற்றுக்கொள்வோம்" எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று திமுக வரலாற்றில் முத்திரைபதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினைத்தொடர்ந்து, வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி (17-12-2023) ஞாயிற்றுக்கிழமை அன்று திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.