The second DMK youth state conference of has started!

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இந்நிலையில், இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

இதனையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள மாநாட்டு திடலில் 1,500 டிரோன்களின் கண்ணைக் கவரும் காட்சி நேற்று நடைபெற்றது. இதனை முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த டிரோன் காட்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வானில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக கலைஞரின் கையெழுத்துடன் கூடிய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில், இன்று (21ம் தேதி) காலை 9 மணிக்கு மாநாடு திடலுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர்களும், எம்.பி.க்களும், கட்சி நிர்வாகிகளும் வந்தனர். பிறகு துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 100 உயர் கொடி கம்பத்தில், தி.மு.க. கொடியை ஏற்றி தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டை துவக்கி வைத்தார்.