seat allocation Talks between the DMK and the Communist Party of India

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று (03.02.2024) பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 விருப்ப தொகுதியில் இருந்து 2 மக்களவை தொகுதிகள், மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களையும் கேட்டுள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி. சுப்பராயன், துணைப் பொதுச் செயலாளர் வீரபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தேர்தல் குழுவுடன் கடந்த 28 ஆம் தேதி (28.01.2024) முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது கவனிக்கத்தக்கது.