Skip to main content

அனல் பறந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில் சீமான் ஆதங்கம்!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Seaman panicked in the final phase of the campaign

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

Seaman panicked in the final phase of the campaign

அந்த வகையில் இன்று (08.07.2024) விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி அடுத்த கெடார் கிராமத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரத்தூர் பொதுக்கூட்டத்தில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்டமாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரசாரம் செய்தனர். இதனையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாளை மறுதினம் (10.07.2024) வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசுகையில், “மதம், சாதியை வைத்து இளைஞர்களிடம் நஞ்சை விதைக்கின்றனர். இந்தி, சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் நிச்சயம் ஒருநாள் வெட்கப்படுவார்கள். சாதி, மதம், கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. திமுகவை அகற்றாமல் இந்த மண்ணில் நல்ல அரசியல் இருக்காது. நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை. நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். 60 ஆண்டுக் குப்பையை 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம். நான் தமிழன் என்பது தான் எனது அடையாளம் ஆகும். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர், அது தவறு. ஒரு மொழியைப் பேசும், குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும் போது உங்களுக்குப் புரியாது, பாதிக்கும் போது உங்களுக்குப் புரியும். இளையராஜா பெரும்பான்மை இந்து அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை. சாதி, மதம் எல்லாம் நேற்று வந்தது” எனத் தெரிவித்தார். 

Seaman panicked in the final phase of the campaign

அன்புமணி ராமதாஸ் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். இது சமூக நீதிக்கான தேர்தல். திமுக கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரத்து செய்தார்களா?. நீட் தேர்வு ரத்து குறித்து, பிரசாரத்திற்கு வந்துள்ள அமைச்சர் உதயநிதியிடம் கேளுங்கள். பாமகவிற்கு வாக்களித்தால், நல்ல எதிர்காலம் உண்டு.

திமுக அரசிடம் எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. மக்கள் தனது பிரசாரத்தில் பங்கேற்காத வகையில் மக்களை அடைத்து வைக்கின்றனர். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்களை அடைத்து வைக்கும் கலாச்சாரத்தைக் கண்டுபிடித்தவர் செந்தில் பாலாஜி ஆவார். பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
The sun can never be hidden Chief Minister M.K. Stalin

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. அதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே வேளையில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 26 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 479 வாக்குகளும் பெற்றனர். 

The sun can never be hidden Chief Minister M.K. Stalin

இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி உறுதியான நிலையில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். அங்குத் திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

இந்நிலையில் விக்கரவாண்டி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்றையும் அப்பதிவில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“சர்வாதிகாரத்தை ஒழிக்க மக்கள் விரும்புகின்றனர்” - ராகுல் காந்தி எம்.பி.!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
"People want to end dictatorship" - Rahul Gandhi MP

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன.  அதன்படி 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அதே போன்று தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக பின்னியிருந்த பயம், குழப்பம் என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது. பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இந்தியா கூட்டணியுடன் முழுமையாகத் துணை நிற்கின்றனர். ஜெய் ஹிந்துஸ்தான், ஜெய் அரசியலமைப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.