Advertisment

முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்: -ராமதாஸ் வலியுறுத்தல்

ramadoss

Advertisment

பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் கூட மத்திய அரசு தலையிட்டு, அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உள்ளூர் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என்பது குறித்து இன்றைக்குள் தெரிவிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. கரோனா எப்போது கட்டுப்படுத்தப்படும் என்பதைக் கணிக்க முடியாத சூழலில், மத்திய அரசின் ஆணை மாநில அரசுகளுக்குத் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கரோனா அச்சம் தணிந்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதும் தெரியவில்லை. இத்தகைய சூழலில், மாநில பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் கடந்த 15-ஆம் தேதி காணொளிவாயிலாக கலந்தாய்வு நடத்திய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் தேதியைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மராட்டியம், தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்த நிலையில், இன்றைக்குள் அதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்கும்படி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

Advertisment

பள்ளிகளை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மாதத்தில் திறக்கலாம் என்றும், இதுபற்றி பெற்றோரின் விருப்பங்களை அறிந்து முடிவெடுக்கும்படியும் மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? விரைந்து முடிவெடுக்கும்படி மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கரோனா பாதிப்புகள் இன்னும் குறையவில்லை; மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 40,243 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களைப் பொறுத்தவரை நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 4,979 பேரும், மராட்டியத்தில் 9,518 பேரும், ஆந்திராவில் 5,041 பேரும், கர்நாடகத்தில் 4120 பேரும், கேரளத்தில் 821 பேரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்துமே புதிய உச்சங்கள் ஆகும். உலக அளவில் தினசரி கரோனா பாதிப்புகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியாதான் உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சிந்திப்பதே பொருத்தமற்ற செயலாகத் தான் இருக்கும். மத்திய அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, பள்ளிகள் திறக்கும் தேதியை மாநில அரசுகள் முடிவு செய்தால் கூட, அந்தத் தேதிகளில் பள்ளிகளைத் திறக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தான் உண்மை... இது தான் எதார்த்தம் ஆகும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படியான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தேதிகள் குறிக்கப்பட்டன. ஆனால், எந்தத் தேதியிலும் தேர்வுகளை நடத்த முடியாமல், கடைசியாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல், நீட் மற்றும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளுக்கும் பல்வேறு தேதிகள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் நுழைவுத்தேர்வுகளை நடத்த முடியாமல் இப்போது செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேதியிலும் அறிவிக்கப்பட்டபடி தேர்வு நடத்த முடியுமா? என்பது தெரியவில்லை. மனிதர்கள் வகுக்கும் திட்டங்களையெல்லாம் கரோனா முறியடித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டுவது எந்த வகையிலும் பயனளிக்காது.

http://onelink.to/nknapp

ஒருவேளை செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்து, அந்தத் தேதியில் திறக்க முடியாமல் ஒத்திவைக்கப்பட்டால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் முழுமையாக ஒழிக்கப்படாமல் பள்ளிகளைத் திறந்து, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் மிகவும் நெருக்கமாக அமரவைக்கப்பட்டால் அதுவே தீவிர நோய்ப்பரவலுக்கு வழிவகுத்து விடக்கூடும். எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் அரசு அவசரம் காட்டக்கூடாது.

அதுமட்டுமின்றி, பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் கூட மத்திய அரசு தலையிட்டு, அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாக அமையும். மாறாக, பள்ளிகளை எப்போது திறக்கலாம்? வகுப்புகளை எந்த முறையில் நடத்தலாம்? என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பன குறித்து உள்ளூர் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

pmk Ramadoss issue open school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe