Skip to main content

முதல்ல ஆவினை காப்பாத்துங்க... அப்புறம் பஞ்ச் வசனம் பேசலாம்... ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னுசாமி பகிரங்க கடிதம்

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

 

''அழிவை நோக்கி பயணப்படும் ஆவின் நிறுவனத்தைக் முதலில் காப்பாற்றுங்கள். அதன் பிறகு திருக்குறளை அச்சிடலாம்" என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

நீங்கள் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் தொடங்கி "மோடி தான் எங்கள் டாடி", "எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்" என "பரபரப்பிற்கு பஞ்சம் வைக்காமல் பஞ்ச் வசனம்" பேசி வரும் உங்களால் தற்போது வரை பரபரப்பிற்கு சற்றும் குறையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது தமிழகம். 

 

K. T. Rajenthra Bhalaji


 

கடந்த 2017ம் ஆண்டு  "தனியார் பாலை குடிப்பதால் தான் குழந்தைகளுக்குக் கூட புற்றுநோய் வருகிறது" என நீங்கள் துவங்கி வைத்த பிரச்சாரம் தற்போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வரை விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பால் குடிப்பதா...? வேண்டாமா...? பாக்கெட் பாலினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா...? வேண்டாமா....? என்கிற அச்சமும், பீதியும் ஏற்பட்டு பால்வளத்துறை இக்கட்டான நிலையில் உள்ளதை நீங்கள் அறிவீர்களா...? எனத் தெரியவில்லை 
 

அதுமட்டுமின்றி தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான, தங்களது துறையின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் பல கோடி ரூபாய் ஊழல்களிலும், பல்வேறு முறைகேடுகளிலும் சிக்கி சின்னாபின்னமாகி, தனியாருக்கு தாரை வார்க்கின்ற அளவிற்கு அழிவை நோக்கி செல்வதை நீங்கள் கண்டு கொண்டீர்களா...? அல்லது கண்டும் காணாமல் இருக்கிறீர்களா...? என தெரியவில்லை.


 

இந்நிலையில் பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோரிக்கை முன் வைத்தார் என்கிற ஒரே காரணத்திற்காக "மிக விரைவில் முதல்வரின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு  வினியோகிக்கப்படும்." எனக் கூறியுள்ள தங்களின் வேகம் எங்களுக்கு வியப்பைத் தருகிறது.
 

உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம், உயிர் காக்கும் பாலைக் குடித்தால் அது உயிரைக் குடிக்கும் கொடிய விஷம் என்றெல்லாம் செய்திகள் பரவி நாடே அல்லல்பட்டுக் கொண்டிருக்க திருக்குறளையும், திருவள்ளுவரையும் வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் பாஜகவிற்கு நீங்கள் துணை போவது தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
 

தமிழக அரசின் மாநகர பேருந்துகளில் ஏற்கனவே இருந்த திருக்குறளை அழிக்கும் பணிகளும், மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட அரசுதுறையின் பல்வேறு ரசீதுகளில் தமிழ் கொஞ்சம், கொஞ்சமாக அகற்றப்பட்டு கொண்டு வரும் வேளையில் தற்போது திருக்குறளை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளதைப் போன்று தற்போது தங்களுக்கும் ஏற்பட்டிருப்பதை காண்கையில் "ஆடு நனைவதை பார்த்து ஓநாய் அழுத கதை" என்கிற வாசகம் தான் எங்களுக்கு நினைவிற்கு வருகிறது.


 

எனவே நீங்கள் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும், அன்னைத் தமிழிற்கும் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைத்தால் முதலில் ஊழலிலும், முறைகேடுகளிலும் சிக்கி தள்ளாடி அழிவை நோக்கி பயணப்படும் ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கவும், பால் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்திடவும், பால் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும், சந்தேகத்தையும் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிவர்த்தி செய்திடவும் துறை சார்ந்த அமைச்சர் என்கிற முறையில் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
 

அதுமட்டுமின்றி அரசுதுறையின் பல்வேறு ரசீதுகளில் தமிழ் கொஞ்சம், கொஞ்சமாக அகற்றப்பட்டு கொண்டு வருவதை தடுத்து நிறுத்துவதோடு, "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்கிற நிலையை கொண்டு வந்திடவும், இவை அனைத்திற்கும் மேலாக "அமைச்சர் பெருமக்கள் அனைவரும் 1330திருக்குறளையும் மனப்பாடம் செய்து அதனை ஊடகங்கள் வாயிலாக ஒப்புவிக்க" ஆவண செய்யுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சூரியன் மக்களை வதைக்கிறது!” - வெயில் சூட்டை ஒப்பிட்ட ராஜேந்திர பாலாஜி!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

 "The sun oppresses the people!" -Rajendra Balaji who compared the heat!

விருதுநகர் மாவட்டம் – சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ரத்ததான முகாம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி “மேடைக்கு முன்பாக வெயிலில் நீங்கள் காய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.  

சூரியன் மக்களை வதைக்கிறது. அதனால்தான், நாங்களும் திறந்தவெளி மேடையில் நின்று வெயிலின் கொடுமையை அனுபவிக்கிறோம். சூரியன் ஏற்படுத்தும் கஷ்டத்தை உணர்ந்தால்தானே, அதிலிருந்து விடுபடுவதற்கு உரிய ஆயத்தப்பணிகளை, நாங்களும் செய்ய முடியும்? இந்தத் துன்பத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும். திமுக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராட்டம் நடத்துகிறார்கள்.

அதிமுக, மக்களை நம்பியே தேர்தலில் களம் காண்கிறது.  திமுகவோ, கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. வெற்றி அருகில் வந்துவிட்டது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியின் சீர்கேடுகளைச் சொல்லியே வாக்கு சேகரிக்கவேண்டும். அப்போது, பட்டாசுத் தொழில் பிரச்சனை, நெசவாளிகள் பிரச்சனை, அரசு ஊழியர்கள் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. அதனால்,  டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியின் கரம் ஓங்கும். தமிழ்நாட்டின்  நலன் காக்க, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராடுவார்கள்.அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார். 

Next Story

செய்தியாளர் மருத்துவச் செலவுக்கு ராஜேந்திர பாலாஜி ரூ. 2 லட்சம் நிதி!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Rajendra Balaji Rs. 2 lakh fund for journalist's medical expenses!

திருப்பூர் மாவட்டம் – பல்லடம் தாலுகாவில் தனியார் டிவி செய்தியாளராகப் பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர், கடந்த வியாழன் இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி டிவி செய்தியாளர் நேசபிரபு மருத்துவச் செலவுக்கான ரூ.2 லட்சத்தை விருதுநகர் மாவட்ட டிவி செய்தியாளர் ஜெய்லானியிடம் கொடுத்துள்ளார்.