சாத்தூர் தொகுதியில் இரண்டாமிடம் யாருக்கு?- மும்முனைப் போட்டியில் தகிக்கும் வேட்பாளர்கள்!    

SATTUR ASSEMBLY CONSTITUENCY CANDIDATES STRENGTH

நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021- 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை வெளியிட்டுள்ளோம்.

சாத்தூர் தொகுதியில் நிலவும் மும்முனைப் போட்டியையும், வேட்பாளர்களை வரிசைப்படுத்தியும், நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளி வந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக, சாத்தூர் தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ- “அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே லட்சியம்..” என்று சவால்விட்டு, அ.ம.மு.க. பக்கம் தாவி சாத்தூர் தொகுதியில் போட்டியிடுபவர் சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜவர்மன்.

‘அப்படியென்றால் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற நினைப்பே இல்லையா?’ என்று கேட்டால், “அ.தி.மு.க.வை தோற்கடிப்பேன்; ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனையும் தோற்கடிப்பேன். மீண்டும் எம்.எல்.ஏ. ஆவேன். மக்கள் ஆதரவு எனக்கே இருக்கிறது.” என்று சிலிர்க்கிறார் ராஜவர்மன்.

சாத்தூர் தொகுதியின் கள நிலவரம் எப்படி?

ஜாதி மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி அடிப்படையிலான ‘அரித்மெடிக்’ ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனுக்கு சாதகமாக உள்ளது. தொகுதியில் இரண்டாம் இடத்தில் உள்ள நாயுடு சமுதாய வாக்குகளை ரகுராமனால் அறுவடை செய்ய முடியும். முதலிடத்தில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை, ராஜவர்மன் கணிசமாகவும், அ.தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரன் கட்சி ரீதியாகவும் பிரித்துக்கொள்கின்றனர். தேர்தல் களத்தில் ‘எங்க ஏரியா.. உள்ளே வராதே!’ என்று முக்குலத்தோர் ஏரியாக்கள் பலவற்றில் ரவிச்சந்திரனுக்கும், சிலவற்றில் ராஜவர்மனுக்கும் எதிர்ப்பு இருக்கிறது. சாத்தூர் டவுண் நாடார் வாக்குகளும்கூட, ஓரளவுக்கு ராஜவர்மன் பக்கமே சாய்கின்றன. தே.மு.தி.க. வாக்குகள் இவருக்கு ப்ளஸ்.

தொகுதியில் அதிகமாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள், யாருக்கு ஆதரவு என்ற தள்ளாட்டத்தில் இருக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட புரட்சி பாரதம் கட்சிக்கென்று, இத்தொகுதியில் எந்த வாக்கு வங்கியும் இல்லை. அதேநேரத்தில், விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகள், ம.தி.மு.க. வேட்பாளருக்கு பலம் சேர்க்கின்றன. இத்தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு வங்கி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. ரெட்டியார், செட்டியார், சாலியர், பிள்ளை, யாதவர், மூப்பர் வாக்குகளில் பெரும்பாலனவை ரகுராமனுக்கும், ஓரளவுக்கு ராஜவர்மனுக்கும் போகின்றன.

நாம் தமிழர் வேட்பாளராக கி.பாண்டியும், ஐ.ஜே.கே. சார்பில் எம்.பாரதியும் களமிறங்கினாலும், மும்முனைப் போட்டியே நிலவுகிறது இத்தொகுதியில். வேட்பாளர்களைப் பொறுத்த மட்டிலும், கில்லியாகச் சுற்றிவருவது ராஜவர்மன் மட்டும்தான். பெருவாரியான ஆதரவுப் பட்டாளம் அவர் பின்னாலேயே செல்கிறது. வாக்கு சேகரிப்பதற்கு நடந்தே போகிறார். வாக்காளர்கள் யாரைப் பார்த்தாலும் காலில் விழுகிறார். ஏனென்றால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மட்டுமல்ல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். எம்.எல்.ஏ. பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அரசியலில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்துதான், வெறித்தனமாக தேர்தல் வேலை பார்க்கிறார்.

பணபலம் இல்லாத ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனோ, அ.தி.மு.க. ரவிச்சந்திரனோ, தேர்தல் பணியில் அப்படி ஒன்றும் தீவிரம் காட்டவில்லை. ம.தி.மு.க. தரப்பு ஓட்டுக்கு பணம் கொடுக்குமா? கொடுக்காதா? என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக, இத்தொகுதியில் விவாதிக்கின்றனர். அ.தி.மு.க. ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், முறையாகப் போய்ச் சேருமா என்ற சந்தேகம் வேட்பாளர் தரப்புக்கே இருக்கிறது. மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும், ஓட்டுக்கு அதிகமாக பணம் தந்தே ஆகவேண்டும் என்ற ராஜவர்மனின் முயற்சிக்கு, கடைசி நேரத்தில், அதிகார பலத்தால் முட்டுக்கட்டை போடும் திட்டம் ஆளும் கட்சியினருக்கு இருக்கிறது.

யார் வெற்றி பெறுவார் என்பதைக் காட்டிலும், இரண்டாவது இடம் யாருக்கு என்பதுதான், இத்தொகுதியின் பிரதான கேள்வியாக இருக்கிறது.

admk ammk sattur MLA tn assembly election 2021 viruthunagar
இதையும் படியுங்கள்
Subscribe