Advertisment

‘அதிமுகவை காப்பாற்ற யாரும் இல்லையா?’ - தோல்விக் குமுறலுக்கு சாத்தூரே சாம்பிள்!

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

“பத்து வருஷத்துக்கு முன்னால சாத்தூர் தொகுதில அதிமுகவுக்கு விழுந்த வாக்கு சதவீதம் 58.32. அப்ப திமுகவுக்கு கிடைச்சது 39.07 சதவீத வாக்குகள்தான். கடந்த சட்டமன்றத் தேர்தல்ல.. இந்தத் தொகுதில திமுக கூட்டணில இருந்த மதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 38.68. அதிமுக 32.85 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்ல, மாவட்ட பஞ்சாயத்து வார்டுல திமுக 76.83 சதவீத வாக்குகளும், அதிமுக 15.54 சதவீதம் வாக்குகளும் வாங்கியிருக்கு. அதாவது, தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமியைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் திமுக வேட்பாளர் பகவதி திருவேங்கடசாமி. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெறுவது வழக்கம்தான். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.

Advertisment

அதே நேரத்தில், தோல்வி என்றாலும் கவுரவமான தோல்வியாகத்தானே இருந்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு மோசமாகவா இருக்க வேண்டும்? அதிமுகவுக்கு ஏன் இந்த வீழ்ச்சி? அதிமுக தொண்டர்கள் கடும் எரிச்சலில் இருக்காங்க. சாத்தூர் ஒரு சாம்பிள்தான்!” எனப் புள்ளிவிவரங்களோடு பேச ஆரம்பித்தார், அந்த அதிமுக நிர்வாகி.“விருதுநகர் கிழக்கு மாவட்டத்துல தேவையில்லாத பிரச்சனை ஓடிட்டிருக்கு. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜிக்கும் சாத்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் மொதல்ல பிரச்சனையாச்சு. ராஜவர்மன் கட்சிய விட்டுப் போனாரு.

Advertisment

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

அப்பத்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்தண்ணன் தம்பி ரவிச்சந்திரனை கிழக்கு மாவட்டச் செயலாளராக்கி, சாத்தூர்ல போட்டியிட சீட்டும் வாங்கித் தந்தாரு ராஜேந்திரபாலாஜி. சாத்தூர்ல தோற்றுப்போன சோகத்துல இருந்த ரவிச்சந்திரனுக்கு, திரும்பவும் ராஜவர்மனை ராஜேந்திரபாலாஜி கட்சிக்குள்ள கொண்டுவந்தது அறவே பிடிக்கல. என்னைக் கேட்காம ராஜவர்மனை எப்படி கட்சில சேர்க்கலாம்கிற கோபம் தலைக்கேறிருச்சு. இதப்பத்தி ராஜேந்திரபாலாஜிகிட்ட நிர்வாகிகள் சொன்னப்ப.. ‘முன்னாள் எம்.எல்.ஏ. ஒருத்தரு திரும்பவும் கட்சிக்கு வர்றாருன்னா அது கட்சிக்குப் பலம்தானே? தலைமை சொல்லித்தானே ராஜவர்மனை திரும்பவும் கட்சில சேர்த்திருக்கோம். கிழக்கு மாவட்டத்துல கட்சி வேலை எம்புட்டோ இருக்கு. அதைப் பார்க்காம, என்னைக் கேட்கலைன்னு உங்க மாவட்டச் செயலாளர் குற்றம் சொல்லிட்டிருந்தா நல்லவா இருக்கு’ன்னு அவரோட நியாயத்தச் சொன்னாரு.

ரவிச்சந்திரனுக்கோ ஆத்திரம் குறைஞ்சபாடில்ல. மாவட்டச் செயலாளரான என்னைக் கேட்காம எப்படி கட்சில சேர்க்கலாம்னு, அவரோட ஆட்கள கூட்டிக்கிட்டு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வரைக்கும் போயி புலம்பிட்டு வந்தாரு. இவரோட பேச்சு தலைமைகிட்ட எடுபடல.ரவிச்சந்திரனை, ராஜேந்திரபாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் எதிரான நிலைய எடுக்க வச்சது, இங்கே ஒன்றியச் செயலாளரா இருக்கிற சண்முகக்கனிதான். ஏன்னா.. அரசியல்ல ராஜவர்மனோட வளர்ச்சி, சண்முகக்கனிக்கு பிடிக்காமப் போனதுதான். நிஜத்தை சொல்லணும்னா.. இந்த ரவிச்சந்திரனோ, சண்முகக்கனியோ கட்சி மட்டத்துல, தொண்டர்கள்கிட்ட சொல்லிக்கிற அளவுக்கு செல்வாக்கு இல்லாதவங்க. ஆனாலும்.. ஊராட்சித் தேர்தல் நடக்கிற இந்த நேரத்துல, ஒரு ஸ்டண்ட் அடிச்சுப் பார்த்துடணும்னு திட்டம் போட்டாங்க.

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

இங்கே ஏ.ராமலிங்கபுரம் அதிமுக கிளைச்செயலாளரா இருக்கிற வீரோவுரெட்டி, ராஜேந்திரபாலாஜிகிட்ட அப்பப்ப செலவுக்குப் பணம் வாங்குறவரு. அவரோட பிள்ளைங்க படிப்புச் செலவுக்குக் கூட ராஜேந்திரபாலாஜி நெறய பணம் கொடுத்திருக்காரு. ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு கை நீட்டுற அவர வச்சு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணன் கண்ணு முன்னால ராஜேந்திரபாலாஜிய டென்ஷன் ஆக்கணுங்கிறதுதான் திட்டம். ஊராட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த வழியா எடப்பாடி பழனிசாமி அண்ணன் வந்தப்ப, அவரு இருந்த காருலதான் ராஜேந்திரபாலாஜியும் இருந்தாரு. இந்த வீரோவுரெட்டி என்ன பண்ணுனாருன்னா.. அவங்க வந்த காருகிட்ட போயி, கே.டி.ஆர். ஒழிகன்னு சத்தமா கத்தினாரு. எடப்பாடி அண்ணன் பக்கத்துல இருக்கிறப்ப, தன்கிட்ட பணம் வாங்குற வீரோவுரெட்டி போட்ட ஒழிக கோஷத்தக் கேட்டு கோபத்துல காரைவிட்டு இறங்கி திட்டினாரு ராஜேந்திரபாலாஜி. அவரு திரும்பவும் காருல ஏறி கிளம்பின பிறகு, வீரோவுரெட்டிய கட்சிக்காரங்க அடிச்சதும் விலக்கிவிட்டதும், காருல ஏற்றி அப்புறம் இறக்கிவிட்டதும், போலீஸ் கண்ணு முன்னாலதான் நடந்துச்சு. அந்தக் களேபரத்துல, சாத்தூர் அதிமுக நகரச்செயலாளர் இளங்கோவை ரவிச்சந்திரன், சண்முகக்கனி தரப்பு தாக்கியதும் நடந்துச்சு. ஆனாலும், ராஜேந்திரபாலாஜி மேலயும் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாகப் பேசுதல், ஆள்கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாச்சு. உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்ச பிறகுதான், ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீனே கிடைச்சது.

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

சரி, ரவிச்சந்திரன் தரப்பு தூண்டிவிட்டு ராஜேந்திரபாலாஜி மேல கேஸ் போடவச்ச வீரோவுரெட்டியோட நிலைமை இப்ப என்ன தெரியுமா? எட்டு வருஷத்துக்கு முன்னால வேலை வாங்கித் தர்றேன்னு திமுக கிளைச்செயலாளர்கிட்ட பணம் வாங்கிருக்காரு. வேலை வாங்கித் தரவுமில்லை. பணத்தையும் திரும்பக் கொடுக்கல. மோசடி புகார்ல இப்ப தலைமறைவா இருக்காரு வீரோவுரெட்டி.

கட்சி நிர்வாகிகளுக்குள் நடக்கிற ‘ஈகோ ஃபைட்’ இங்கே விருதுநகர் கிழக்கு மாவட்டத்துல, அதிமுகங்கிற கட்சியே இல்லாத மாதிரி பண்ணிருச்சு. ராஜவர்மனை கட்சில சேர்த்தா சேர்த்துட்டுப் போகட்டும்னு ரவிச்சந்திரன் நினைச்சிருந்தா, உள்ளாட்சி தேர்தல்ல இத்தனை மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது. கட்சிய பலப்படுத்த முடியலைன்னாலும், பலவீனப்படுத்திட்டாங்க. ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மன், இளங்கோ மாதிரியான கட்சி முக்கியஸ்தர்களைப் பகைச்சுக்கிட்டு, உள்ளாட்சித் தேர்தல்ல என்ன ஓட்டு வாங்க முடியும்? சாதாரண தொண்டனும் தெரிஞ்சு வச்சிருக்கிற இந்த விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்காம இருக்கிறவங்க கையிலதான் இந்த மாவட்டம் இருக்கு.

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6aeaed51-6a12-451e-a6a5-d9d3abd4a0d6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_85.jpg" />

சாத்தூர் கட்சி ஆபீஸ்ல ராஜேந்திரபாலாஜி படம் இருக்கவே கூடாதுன்னு, கழற்றி வீசும்படி செஞ்சாரு. கட்சித் தொண்டன் ஒருத்தன் ரவிச்சந்திரனைப் பார்த்துக் கேட்கிறான், ‘ராஜேந்திரபாலாஜி செய்தி மந்திரியா இருக்கிறப்ப, உங்க மருமகனுக்கு ஏ.பி.ஆர்.ஓ. வேலை போட்டுக் கொடுத்தாருல்ல. அதை ரிசைன் பண்ணச் சொல்ல வேண்டியதுதானே? உயர்கல்வி அமைச்சரா பழனியப்பன் இருந்தப்ப, உங்க வீட்டுக்காரம்மாவுக்கு துணைவேந்தர் பதவி கிடைக்கிறதுக்கு சிபாரி பண்ணுனது ராஜேந்திரபாலாஜிதானே? அவங்கள ராஜினாமா பண்ணச் சொல்லுவீங்களா? ராஜேந்திரபாலாஜியை ராஜவர்மன் பேசாத பேச்சா? அவரே ராஜவர்மனை ஏத்துக்கிட்டாரு. ரவிச்சந்திரன் முரண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம்? கட்சிதான் காணாமப் போய்க்கிட்டிருக்கு.’ என்று ரொம்பவே நொந்துகொண்டார்.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் குமுறலுக்கு விளக்கம்பெற, விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்காமல், தொடர்ந்து நம்மைத் தவிர்த்தபடியே இருந்தார்.

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு மாவட்டம்.. தொகுதிக்குத் தொகுதி.. இதே ரீதியிலான விவகாரங்கள் உள்ளன. உயர்மட்டத் தலைவர்களிடமும் இத்தகைய பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்குகின்றன. ‘இதற்கெல்லாம் தீர்வே இல்லையா? கட்சியைக் காப்பாற்ற யாருமில்லையா?’ எனத் தொண்டர்களும் குமுறவே செய்கின்றனர்.

rajavarman rajendrabalaji admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe