Skip to main content

எடப்பாடி அன் கோ-வின் 'முகாரி' ராகத்தைக் கேட்டிருந்தால் எஸ்.ஐ. ரகுகணேஷுக்கு புரமோஷன் கூட கொடுத்திருப்பார்கள்: எஸ்.எஸ்.சிவசங்கர்!

 

police

 

எடப்பாடி அன் கோ தினம் பாடும், "அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்", என்ற முகாரி ராகத்தைக் கேட்டு, திமுக தலைவர் யோசித்திருந்தால் இந்த வழக்கை இந்தக் கூட்டம் வலுவிழக்க செய்திருக்கும். நீதிபதி குற்றம் சாட்டிய பிறகு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோருக்கு அடுத்த நாளே பணியிடம் வழங்குகிறார்கள் என்றால், திமுக தலைவர் தலையிட்டிருக்காவிட்டால் எஸ்.அய்கள் பாலகிருஷ்ணனுக்கும், ரகுகணேஷுக்கும் இன்ஸ்பெக்டர்களாக கூட புரமோஷன் கொடுத்திருப்பார்கள் என கூறியிருக்கிறார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

 

மேலும் அவர், "அரசியல் செய்கிறார், அரசியல் செய்கிறார்", என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஓலத்தைக் கண்டு அயர்ந்து போகாமல், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாட்டுப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால் தான், இன்று சாத்தான்குளம் காவல் நிலைய கொலைக்கார எஸ்.ஐ ரகுகணேஷின் கைது நடந்திருக்கிறது.

 

மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்த பிறகு தான், ஜெயராஜ் - பெணிக்ஸ் கொலை குறித்து பரவலான கவனம் ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனக் களம் இறங்கினார்கள். இந்திய அளவில் ஊடகங்கள் பார்வை திரும்பியது. உலக செய்தியானது. நீதித்துறை தானாக தலையிட்டது. இன்று கைது வரை வந்திருக்கிறது.

 

22 ஆம் தேதி ஜெயராஜ் - பெணிக்ஸ் இருவரும் போலீஸாரின் கொலை வெறி தாக்குதலுக்கு உயிரிழந்தனர்.

 

23 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்தார்கள். அப்போதே "திரைமறைவில் போலீஸ் ஆட்சியா?", என்ற கேள்வியை எழுப்பினார்.

 

24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், " காவல்துறை அதிகாரிகளே, அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்து நீங்களே குற்றவாளிகளாகும் செயல்களைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கடமையினை சரியாகச் செய்யுங்கள். கால சக்கரம் இப்படியே சுற்றிக் கொண்டிருக்காது", என்று எச்சரிக்கை விடுத்தார்.

 

26 ஆம் தேதி அன்று, கொலையுண்ட அப்பாவிகள் ஜெயராஜ் - பெணிக்ஸ் குடும்பத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக மகளிரணி செயலாளர் எம்.பி கனிமொழி மூலமாக ரூபாய் 25 லட்சம் வழங்கப்பட்டது.

 

அன்றே, இந்தக் கொலை வழக்கில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு காணொலியை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.

 

sss

 

27 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சி.பி.ஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம், வழக்கு தொடுப்போம் என மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

 

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளம் சென்று, ஜெயராஜ் - பெணிக்ஸ் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறி, வழக்கில் நியாயம் கிடைக்க உறுதுணையாக இருப்போம் என உறுதி அளித்து வந்தார்.

 

29 ஆம் தேதி, கொலையாளிகளை IPC 302இன் கீழ் வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.

 

அன்றே, நீதிபதியை ஒரு காவலர் மிரட்டிய செய்தி வெளியான உடன், அது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டனம் தெரிவித்தார்.

 

30 ஆம் தேதி, தொடர்ந்து இத்தனை அறிக்கைகள் வெளியிட்டு, வலியுறுத்திய பிறகும் எடப்பாடி இது குறித்து வாய் திறக்காமல், தக்க நடவடிக்கை எடுக்காமல், கொலையாளிகளைக் காக்கின்ற முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால், இந்தக் கொலைக்கு பொறுப்பேற்று போலீஸ் மந்திரி என்ற முறையில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

 

இவ்வளவு கடுமையாக தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் மு.க.ஸ்டாலின் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்.

 

"மூச்சுத் திறணலால் மரணம், உடல் நலக் குறைவால் மரணம்", என தானே டாக்டராக மாறி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்தார். அப்படியே பிரச்சினையை அமுக்கி விடலாம் என்று பார்த்தார்.

 

அந்தத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரி கடம்பூர் ராஜூ "லாக்கப் மரணத்திற்கு" புதிய விளக்கம் கொடுத்தார். "காவல் நிலையத்திலேயே அடிபட்டு இறந்து போனால் தான் லாக்கப் மரணம். அவர்கள் சிறைக்கு போய், மருத்துவமனையில் இறந்தார்கள். அதனால் அது லாக்கப் டெத் அல்ல", என்று கோமாளித்தனமாக பேசினார்.

 

உதயக்குமார் போன்ற மேதாவி அ.தி.மு.க அமைச்சர்கள், தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவம் பெரிய விஷயமே இல்லை என்ற தோரணையில் பேட்டிக் கொடுத்தார்கள்.

 

மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கொடுத்த அறிக்கைகளைக் கண்டும், காணாதது போல் முதலமைச்சர் எடப்பாடி நாட்களைத் தள்ளினார்.

 

எதிர்க்கட்சி, பத்திரிகைகள், ஊடகங்கள் எனத் தொடர்ந்து ஒலித்த குரல்களைக் கேட்டு, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்து, விசாரணை செய்தது. அதனால் தான் வழக்கு இந்த நிலைக்கு வந்துள்ளது.

 

http://onelink.to/nknapp

 

எடப்பாடி அன் கோ தினம் பாடும், "அரசியல் செய்கிறார் எதிர்கட்சித் தலைவர்", என்ற முகாரி ராகத்தைக் கேட்டு, மு.க.ஸ்டாலின் யோசித்திருந்தால் இந்த வழக்கை இந்தக் கூட்டம் வலுவிழக்க செய்திருக்கும்.

 

எல்லோரும் பார்த்திருக்கவே, நீதிபதியை ஒரு காவலரை விட்டு மிரட்டுகிறார்கள், தடயங்களை அழிக்க முயல்கிறார்கள், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்றால், மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தியிருக்காவிட்டால் வழக்கை ஊற்றி மூடியிருப்பார்கள்.

 

நீதிபதி குற்றம் சாட்டிய பிறகு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோருக்கு அடுத்த நாளே பணியிடம் வழங்குகிறார்கள் என்றால், தளபதி அவர்கள் தலையிட்டிருக்காவிட்டால் எஸ்.ஐ-கள் பாலகிருஷ்ணனுக்கும், ரகுகணேஷுக்கும் இன்ஸ்பெக்டர்களாக கூட புரமோஷன் கொடுத்திருப்பார்கள்.

 

மு.க.ஸ்டாலின் கையிலெடுத்த அரசியல் நடவடிக்கைகள் தான், இன்று இந்தக் கொலை கும்பலைக் கைது வரை கொண்டு வந்திருக்கிறது.

 

மு.க.ஸ்டாலின் அரசியல் தொடரும், கொலை ஆட்சியை வீழ்த்த!'' எனக் கூறியிருக்கிறார்.  


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்