Advertisment

சாத்தான்குளம் விவகாரம்... முதலமைச்சரின் கடமை இத்துடன் முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது; மு.க.ஸ்டாலின்!

mks

Advertisment

"ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கிக் கொண்ட தமிழக அரசுஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது”, “இரட்டைக் கொலைக்குக் காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும்", இந்த வழக்கை முறையாக, சட்ட நெறிமுறைகளின்படி, நீதிநியாய வழிமுறைகள் எள்ளளவும் பிசகிடாமல், அரசு தீவிரமாக எடுத்து நடத்த வேண்டும். குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு அப்பாவிகளைக் கொடூரமாகக் கொலை செய்தவர்கள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தலையீட்டினால், உரிய சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன்.

ஆட்சி பலத்தை, அதிகார பலத்தை, போலீஸ் பலத்தைக் காண்பித்து கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற, கடந்த ஒருவார காலமாக அ.தி.மு.க. அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன. ஜெயராஜ் குடும்பத்தின் வற்றாத கண்ணீரும், தென்மாவட்ட மக்கள் வெகுண்டெழுந்து நடத்திய போராட்டமும், நாடு முழுவதும் வணிகர் பெருமக்கள் ஒன்றுபட்டு நடத்திய கடையடைப்பும், உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்களின் முன்னெடுப்பும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கொடுத்த தொடர்ச்சியானஆழமானஅழுத்தங்களும், நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த அரிய உத்தரவுகளும், ஊடகங்கள் அக்கறையுடன் காட்டிய ஆதாரப்பூர்வமான காட்சிகளும், என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அ.தி.மு.க. அரசு சுற்றி வளைக்கப்பட்டது; தப்பிக்க முடியாமல் சட்டப் பொறியில் சிக்கிக் கொண்டது.

Advertisment

பொது மக்களின் இந்த ஒருங்கிணைந்த போராட்டம் இல்லாமல் போயிருக்குமானால், 'செங்கல்லை விழுங்கிவிட்டுச் செறித்துவிட்டது' என்று சொல்லி இருப்பார் முதலமைச்சர். இறுதியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஶ்ரீதர், இரண்டு உதவி ஆய்வாளர்களான ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரும், இரண்டு காவலர்களான முருகன், முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. புதிதாக முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரது கொலைகளுக்கும் காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டுவதாக இருக்கக் கூடாது; கண்துடைப்புக் கைதாக இது மாறிவிடக் கூடாது! நீதிமன்றமும் வழக்கின் தடம் மாற்றத்தை அனுமதிக்காது.

ஏன் இதனைச் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், இந்தக் கொடும் சம்பவத்தின் தொடக்கத்திலிருந்தே இதனை எப்படியாவது மறைக்க நினைத்தது தமிழக அரசு. பென்னிக்சும் ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்த அடுத்த நாளே, தமிழக முதலமைச்சர் விடுத்த அறிக்கையில் குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்தார். பென்னிக்ஸ் மூச்சுத்திணறித்தான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் அவராகவே தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழக அரசின் வழக்கறிஞர், இதனைப் பூசிமெழுகப் பிரயத்தனம் செய்தார். இது ‘லாக்அப் மரணமே அல்ல' என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தன் பங்குக்கு மற்றொரு தீர்ப்பைச் சொன்னார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதியரசர்கள் உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, சாத்தான்குளம் போலீசார் மிரட்டினார்கள்; மாஜிஸ்திரேட்டை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்தார்கள். மாஜிஸ்திரேட் துணிச்சலாக இதுகுறித்து உயர்நீதிமன்றப் பதிவாளருக்குப் புகார் கொடுத்தார். இந்த ஆட்சியில் ஏதுமறியாத அப்பாவி மக்கள் மட்டுமல்ல, மாஜிஸ்திரேட்டுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமானது.

கண்ணால் பார்த்ததை வாக்குமூலமாகக் கொடுத்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன; ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இவ்வளவும் ஆட்சி மேலிடத்தின் அனுசரணை இல்லாமல், உயர் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், சாதாரண காவலர்களால் செய்திருக்க முடியாது என்பது அந்தப் பகுதி மக்களின் அழுத்தமான நம்பிக்கையாக உள்ளது. கடந்த நான்கு நாட்களாக ஊடகங்களில் ஏராளமான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. அநியாயத்தைத் தட்டிக் கேட்க, பொதுமக்களே ஆர்த்தெழுந்து, புலன் விசாரணையை மேற்கொண்டிருப்பதைப் போன்ற எண்ணம் பார்ப்பவர் மனதில் தோன்றியிருக்கிறது. இந்த நெருக்கடியான நிலையில் வேறு வழியில்லாமல் தான், இத்தகைய நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழக அரசு தள்ளப்பட்டது.

இத்தோடு கடமை முடிந்ததாகத் தமிழக அரசு தப்புக் கணக்குப் போடக்கூடாது. இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வினையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகப் பெருமக்களும் கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்கள். யாரையும் காப்பாற்றத் தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. இரண்டு பேர் கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 'பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை'ச் சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது; அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். தலைமைக் காவலர் ரேவதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்புத் தர வேண்டும். கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது விசாரணைக்கு அனைவரும் மனப்பூர்வமாக ஒத்துழைப்புத் தர வேண்டும். இந்த வழக்கை முறையாக, சட்ட நெறிமுறைகளின்படி, நீதிநியாய வழிமுறைகள் எள்ளளவும் பிசகிடாமல், அரசு தீவிரமாக எடுத்து நடத்த வேண்டும். குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

http://onelink.to/nknapp

முதலமைச்சரின் கடமை இத்துடன் முடிந்துவிட்டதாக அவரோ மற்றவர்களோ கருதிக்கொள்ளக் கூடாது; கடமையும் பொறுப்பும் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து, கண்ணியம் மேலோங்க நடந்து கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்! இவ்வாறு கூறியுள்ளார்.

mk stalin incident jail sathankulam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe