ADVERTISEMENT

போலீஸ் நண்பர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகப் புகார்: உண்மை நிலை என்ன? திருமாவளவன் கேள்வி

10:08 AM Jul 09, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா என விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலைகளுக்குப் பிறகு அந்தப் படுகொலையில் போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையொட்டி அந்த அமைப்பைத் தடைசெய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தினோம். அந்தக் கோரிக்கையை ஏற்று இப்போது அந்த அமைப்பு முற்றாகக் கலைக்கப்படுகிறது என ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் ‘இந்த அமைப்பு சட்டப்படியாக உருவாக்கப்பட்ட அமைப்பா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தரவேண்டும்’ என அரசுத் தரப்பிடம் கேட்டிருந்தது. இதனிடையில் இந்த அமைப்பு கலைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நண்பர்கள் அமைப்பில் பல்வேறு மதவாத அமைப்பினர் இடம் பெற்றிருந்ததாகவும் அவர்கள் காவல் துறையினரோடு சேர்ந்துகொண்டு காவல் நிலையங்களில் பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே உண்மை நிலை என்ன என்பதை அறிவதற்கு இது தொடர்பாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

காவலில் நிகழும் வன்முறைகள் குறித்து புகார்கள் தெரிவிப்பதற்காக சுயேச்சையான ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு ஆணை பிறப்பித்தது. ஆனால் தமிழ்நாட்டில் அந்த அமைப்பு உருவாக்கப்படாமலேயே இருந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியப்பிரகாசம் என்பவர் வழக்குத் தொடுத்த பின்னரே 2019 ஆம் ஆண்டில் அந்த அமைப்பை உருவாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக உள்துறைச் செயலாளரின் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியர்களின் தலைமையிலும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் வன்முறைகள் தொடர்பான தமிழக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் முறைப்படி அந்தப் புகார் அமைப்பை உடனே நிறுவிடுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT