ADVERTISEMENT

சாத்தான்குளம் சம்பவம்... காவலர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதுமானதல்ல! ராமதாஸ் அறிக்கை

04:49 PM Jun 24, 2020 | rajavel

ADVERTISEMENT

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தவறு செய்த காவலர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதுமானதல்ல; சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்பேசி கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர் கடந்த 19 ஆம் தேதி காவல்துறையினால் கைது செய்யப்பட்டு, 21-ஆம் தேதி கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நேற்றும், இன்றும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

வணிகர்கள் ஜெயராஜ், பென்னீக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியதாகவும், அதில் ஏற்பட்ட காயத்தின் விளைவாகவே இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களின் இந்த மனிதநேயமற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காவல்துறையினரின் தாக்குதலில் இரு வணிகர்கள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தவறு செய்த காவலர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதுமானதல்ல; சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT