Skip to main content

“இதெல்லாம் அப்படியே விட்டுட முடியாது...” - அதிமுக குறித்து சசிகலா பரபரப்பு பேச்சு 

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

 Sasikala's sensational speech about ADMK

 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டது. சசிகலா, தினகரன், திவாகரன், பாஸ்கரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பெயர்களில் கட்சி தொடங்கினர். 

 

அந்தவகையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ‘அண்ணா திராவிட கழகம்’ எனும் கட்சியை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கட்சியை சசிகலாவுடன் இணைப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய சசிகலா, “அதிமுகவில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் வேதனையை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா?. இதனால் அதிகம் பாதிப்படைவது அப்பாவி தொண்டர்கள் தான். இப்போது நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக்குழுக்கள் அனைத்தும் நிர்வாகிகள் கூட்டமாகத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள்.

 

அதிமுக வரலாற்றிலேயே இதுபோன்று ஆண்டுக்கு ஒருமுறை கட்சி சட்ட விதிகளை யாரும் இப்படி மாற்றியது இல்லை. இது மிகப்பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. இவர்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு அப்படியே விட்டுவிட முடியாது. எத்தனையோ சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் வென்றெடுத்த இந்த இயக்கம், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்ச்சி வலையிலிருந்தும் கண்டிப்பாக விடுபடும். நான் இருக்கின்ற வரை யாராலும் இந்த இயக்கத்தை அபகரித்துவிடவோ, அழித்துவிடவோ முடியாது. எல்லாவற்றையும் சரி செய்து, அனைவரையும் ஒருங்கிணைப்பேன்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்