admk

Advertisment

செப்டம்பர் மாதத்தில் சசிகலா ரிலீஸ் ஆகப் போகிறார் என்கிற செய்தி டெல்லியில் இருந்து பரவுவதால், ஆளும்கட்சித் தரப்பில் சலசலப்பு தெரிவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிவருகின்றனர்.

இந்த நிலையில் எடப்பாடியின் அரசியல் ஆலோசனை டீம், அவரிடம், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய புகழை, மந்திரிகள் வாங்க நினைப்பதை அனுமதிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தமிழக அமைச்சர்கள் பலரும், தினகரனோடு தொடர்பில் இருப்பதாகவும், கதர்த்துறை அமைச்சரான சிவகங்கை மாவட்ட பாஸ்கர் மூலம், மன்னார்குடித் தரப்போடு அவர்கள் தூதுவிட்டு இருப்பதாகவும் அவருக்குத் தகவல் போயிருக்கிறது. அதனால், சசிகலாவை எப்போதும் எதிர்க்கக் கூடிய ஓ.பி.எஸ் மற்றும் தனது நம்பிக்கைக்குரிய கொங்கு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோரைத் தவிர மற்ற அமைச்சர்களைத் தன் கண்காணிப்பு வளையத்தில் வைக்க எடப்பாடி ஆரம்பித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அவர்களிடம் கெடுபிடியும் காட்ட ஆரம்பித்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதாவது இனி தன்னைக் கேட்காமல், அமைச்சர்கள் யாரும் பிரஸ் மீட்டோ, அறிக்கைகளோ கொடுக்கக் கூடாது என்று முதலவர் எடப்பாடி ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பொதுத் தேர்வுகள் பற்றி பிரஸ் மீட் கொடுக்கத் தயாரான செங்கோட்டையனையும், வழக்குகள் பற்றி செய்தியாளர்களிடம் பேச இருந்த சி.வி.சண்முகத்தையும் வார்ன் செய்து பேட்டிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பிரேக் போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையும் மீறி பேட்டிகொடுத்த ராஜேந்திர பாலாஜியைத் தொடர்பு கொண்டு ஏகத்துக்கும் அவர் கடுமை காட்டியிருப்பதாகக் கூறுகின்றனர். இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும், தனது கட்டுப்பாட்டுக்குள் முதல்வர் வைத்துள்ளார் என்றும், சுகாதாரத்துறைசெயலாளர் பீலா ராஜேஷைவேறு துறைக்கு மாற்ற வேண்டாம் என்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் வேண்டுகோளுக்கு, முதல்வர் எந்தப் பதிலும் தற்போது வரை கூறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.