Sasikala speech about ADMK General body meeting

Advertisment

சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில், அ.தி.மு.க. பொருளாளருக்கான அதிகாரங்களைக் குறைத்து பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டது. வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட, கடன் விவகாரம் ஆகியவற்றில் ஈடுபட பொதுச்செயலாளருக்கே அதிகாரம் வழங்கப்பட்டது. இதனால் வரவு செலவுகளை ஆராய்தல், நிர்வகித்தல் உள்ளிட்டப் பொறுப்புகள் பொதுச்செயலாளர் வசம் செல்கின்றனர். இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி கையெழுத்திடும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு.

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, பா.வளர்மதி, ஜெயக்குமார், வைகைச்செல்வன் உள்ளிட்டோர் கூட்டத்தில் உரையாற்றினர்.

Advertisment

அப்போது, பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்க கொண்டு வரப்படும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார் என்று கூறினார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதற்கான சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்டது. அதில், கட்சி பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அத்துடன், ஜே.சி.டி. பிரபாகரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் சசிகலாவின் ஆதரவாளர் வீட்டு திருமணத்தில் பங்கேற்ற சசிகலா, “அதிமுகவின் இன்றைய நிலையை பார்க்கும்போது, தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுயநலவாதிகளை புறந்தள்ளும் நேரமும் வந்துவிட்டது. தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக பணபலம், படைபலத்தை கொண்டு அடித்து பிடிக்கலாம் என்றால் அந்தப் பதவி நிலைக்காது.

சட்டத்திற்கு புறம்பான தலைமையை தொண்டர்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. இருபெரும் தலைவர்களின் ஆசியால் இந்த இயக்கம் மீண்டும் அதே பொலிவோடு மீண்டெழும். நிழுலுக்காக சண்டையிட்டு நிஜத்தை தொலைத்தவர்களின் பின்னால் குதிரைகள் கூட செல்லாது காட்சிகள் மாறினாலும் கொள்கைகளை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள். இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.