ADVERTISEMENT

"அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுக்க வேண்டும்!" - புகழேந்தி

11:35 AM Oct 15, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசியலில் துறவறம் மேற்கொள்வதாக சட்டமன்றத் தேர்தலின்போது வெளிப்படையாக அறிக்கை வாசித்த சசிகலா, தேர்தலுக்குப் பிறகு அமைதியாக இருந்தார். அதிமுக தோல்வியடைந்ததும் சிறிய இடைவெளிக்குப் பிறகு, அதிமுக தொண்டர்கள் தன் பக்கமே இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. அந்த ஆடியோக்கள் அதிமுக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு வார பரபரப்புகளுக்குப் பிறகு, அந்த ஆடியோக்களும் மியூட் செய்யப்பட்டன; சசிகலாவும் மௌனமானார்.

இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசியலில் மீண்டும் லைம் லைட்டிற்கு வருவதற்குத் திட்டமிட்ட சசிகலா, அதிமுகவின் பொன்விழா ஆண்டை (17.10.2021) முன்னிட்டு அதிமுகவை தன் பக்கம் ஈர்ப்பதற்காக வெளிப்படையாக வெளியே வருகிறார். சிறையிலிருந்து விடுதலையானதும் சென்னைக்கு வந்த சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனை ஏனோ சசிகலா செய்யவில்லை.

அதிமுகவின் பொன்விழா ஆண்டில் தற்போது வெளியே வரும் சசிகலா, நாளை (16.10.2021) ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகு மறுநாள் 17ஆம் தேதி (அதிமுக உருவான நாள்) தி.நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவில்லம் மற்றும் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் செல்கிறார் சசிகலா.

இவரது வருகையைப் பிரம்மாண்டப்படுத்த சசிகலா ஆதரவாளர்கள் பல்வேறு வரவேற்புகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சசிகலாவின் வருகையின்போது அதிமுகவினர் யாரும் அந்த நிகழ்வுகளுக்குச் சென்றுவிடக் கூடாது என அதிமுகவின் மா.செ.க்களுக்கு ரகசிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில் சசிகலாவின் வருகை அதிமுக அரசியலில் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? அதிமுக தொண்டர்கள் சசிகலாவின் பின்னால் திரளுவார்களா? என்பது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெங்களூர் புகழேந்தியிடம் நாம் பேசினோம். நம்மிடம் மனம் திறந்த பெங்களூர் புகழேந்தி, “தமிழக அரசியலில் தற்போது அதிமுக எதிர்கொள்வது கடினமான காலக்கட்டம்! உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளில் அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி, அதிமுகவின் அஸ்திவாரம் ஆடிப்போயிருப்பதாகத்தான் பார்க்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில், எத்தனையோ தோல்விகளை அதிமுக சந்தித்து, முன்பைவிட அசுர பலத்துடன் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் தற்போதைய தேர்தல் தோல்வி, ஜீரணிக்க முடியவில்லை. இந்தத் தோல்வியிலிருந்து மீண்டும் கழகம் உயிர்ப்பெறுமா? என்கிற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல; அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அதிமுகவின் பாரம்பரிய குடும்பத்திலிருந்து போட்டியிட்ட கட்சியின் சீனியர் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் கூட தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதற்கு காரணம், மக்களிடம் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்ற அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களைப் பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி தடை போட்டதும், எடப்பாடி பழனிசாமியின் படங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தியதும்தான். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களைச் சொல்லி ஓட்டு கேட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

இது தவிர, தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமியின் படங்களைப் போடுவதை தவிர்த்திருக்க வேண்டும். தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக வெறுக்கிறார்கள். அவரது தலைமையை ஏற்க மறுக்கிறார்கள்; ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். சாதி அரசியல் செய்வதும், ஒரு சாதிக்கு மாத்திரம் சாதகமாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொண்டதும் அதிமுகவின் படுதோல்விக்கு முக்கியமான காரணம்.

ஒரு கொலைப் பழியை எடப்பாடி பழனிசாமி சுமந்து வருவதும், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊழல் ஆட்சியை நடத்தியவர் என்கிற கெட்டப்பெயரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டிருப்பதுதான் அதிமுகவின் இன்றைய நிலைமைக்கு எதார்த்தமான காரணம். அதிமுகவின் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் இதுதான் எதிரொலித்தபடி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் ஏற்றுக்கொள்ளாத சூழலில், சசிகலா தமிழக அரசியலுக்குள் வருவதற்கு சரியான தருணம் இதுதான். அவரது வருகையை நான் கூட எதிர்பார்க்கிறேன். வந்தால் அதிமுக அரசியலில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது சந்தேகமில்லை.

அதேசமயம், அரசியல் வருகையில் தாமதம் கூடாது. தாமதித்தால் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்படும். அதனால், அதிமுகவை ஒருங்கிணைப்பதும் தொண்டர்களை அரவணைப்பதும் அவர்களை ஒற்றுமைப்படுத்துவதும் சசிகலாவின் நோக்கமாக இருந்தால், தாமதமின்றி தயக்கமின்றி அழுத்தமான முடிவுகளை எடுத்து அரசியலுக்குள் வர வேண்டும். ஏனெனில், இனி அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமைதான் தேவை. அந்த ஒற்றைத்தலைமை சசிகலாவின் தலைமையாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

ஆனால், இந்த நிமிடம் வரை முக்கியமானவர்களுக்கு சசிகலாவிடமிருந்து அழைப்பும் இல்லை; தொண்டர்களுக்கும் அழைப்பில்லை! அதிமுகவின் பொன்விழா ஆண்டில் அதிமுகவை தன் பக்கம் ஈர்க்க நினைத்து ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும் சசிகலா, அதிமுக தொண்டர்களை அழைத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஏன், அந்த அழைப்பு வரவில்லை என்பது தெரியவில்லை.

சசிகலாவின் வருகையை தினகரன் விரும்புகிறாரா எனவும் தெரியவில்லை. அரசியலில் எங்கு அவர் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்பதும் புரியவில்லை. அவரது தொண்டர்களாவது சசிகலாவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பைத் தருவதற்கு முனைப்பாக இருக்கிறார்களா? என்பது கூடவும் ஐயப்பாடாக இருக்கிறது. இத்தகைய சிக்கல்களை சரிசெய்யாமல் போவதுதான் நமக்கு வேதனையாகவும் மன வருத்தமாகவும் இருக்கிறது. அதனால், சசிகலாவின் வருகை, களத்திலே இறங்கி அணுதினமும் அரசியல் பணிகளை அவர் கவனித்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியும்! அதிமுகவை மீண்டும் வழிநடத்தவும், பாதுகாக்கவும் ஒரு தலைமையாக அமைய நேரிடும்! தாமதித்தால் எல்லாமே தலைகீழாக மாறிவிடும்!

அதிமுகவில் இருக்கும் குழப்பமும், உட்கட்சிப் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதும்தான் திமுகவின் அசுர வெற்றிக்கு மிக முக்கிய காரணம்! இதனை அவர்கள் உணர வேண்டும். திராவிட இயக்கங்களில் ஒரு இயக்கம் அழிந்துபோய்விடும் என்றால், தமிழக அரசியலில் தேசியக் கட்சியின் வருகையும் ஆதிக்கமும் மேலோங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த சூழ்நிலை உருவானால் திமுகவுக்கு கூட அது ஆபத்தானதுதான்” என்றார் மிக அழுத்தமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT