சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார் என்பதால், அன்றைய தினம் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து தமிழகம் அழைத்து வர அமமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisment

இந்தநிலையில் சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடந்த 20ஆம் தேதி உடல்நலக்குறைவு என தகவல் வெளியானது. இது அமமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காய்ச்சல் காரணமாக சசிகலா பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சசிகலாவின் விடுதலை தள்ளிப்போகுமா என கேள்வி எழுந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார். உடல்நிலை தேறி வருவதால், பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அவர் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

அவரது ட்வீட்டர் பக்கத்தில், ''நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சசிகலா 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.