Advertisment

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80), உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (05.08.2021) காலமானார்.

மறைந்த மதுசூதனின் உடல், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக சார்பில் மதுசூதனன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், பி.கே. சேகர் பாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். சசிகலா அஞ்சலி செலுத்தியபோது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உட்படமுன்னாள் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மதுசூதனனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர். அஞ்சலிக்குப் பிறகு மதுசூதனின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.