Advertisment

“சசிகலா தந்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்..” கே.பி.முனுசாமி

Sasikala  must be fulfilled her promise says  KP Munuswamy

Advertisment

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு தி.நகரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மாளிகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட சசிகலா நேற்று (17ஆம் தேதி) கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார் சசிகலா. அந்தக் கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில், அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னணிநிர்வாகிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்பொழுது இந்த கல்வெட்டு மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கந்தநேரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அ.தி.மு.க.விற்கும் சசிகலாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருந்தால் சசிகலா, இனி அரசியல் பேசக்கூடாது. அவர் கட்சிக்குத்தொண்டராக வரவில்லை. ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தார். காமராஜர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கும் பலர் உதவியாளர்களாக இருந்துள்ளனர். அவர்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவிடம் சேரும் போது, ‘தானோ, தனது உறவினர்களோ அரசியலில் ஈடுபட மாட்டோம்’ என எழுதிக் கொடுத்து விட்டுதான் இணைந்தார். அந்த வாக்கை சசிகலா நிறைவேற்ற வேண்டும். சசிகலா இனி அரசியல் பேசாமல் இருந்தாலே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும். அதிமுகவுக்கும் நன்மை ஏற்படும். எம்.ஜி.ஆர். மறைந்தபிறகு ஜானகியே, ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கைப் பார்த்து கட்சியை அவரிடம் ஒப்படைத்தார்” என்று தெரிவித்தார்.

admk KPmunuswamy sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe