நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனால் அமமுக கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அமமுக கட்சிக்கு அலுவலகம் கொடுத்த அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஈசாக்கி சுப்பையாவும் விலகுவதாக அறிவித்தார்.

Advertisment

admk

இதனால் தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுகளுக்கு பிறகு இன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது. இதில் அமமுக கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலாவிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. சசிகலாவின் ஒப்புதல் வாங்கிய பிறகு புதிய நிர்வாகிகள் பட்டியலை வெகு விரைவில் தினகரன் வெளியிடுவார் என்று தெரிகிறது. பல்வேறு நிர்வாகிகள் விலகிய நிலையில் தினகரன் சசிகலாவை சந்தித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமமுகவை கட்சியாக பதிவு செய்துள்ளதால் கட்சியின் நிர்வாகிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று கூறுகின்றனர். இதனால் நிர்வாகிகள் பட்டியலை சசிகலாவே தயார் செய்தார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தினகரன் கட்சி நிர்வாகிகள் பலரும் வெளியேறிய நிலையில் சசிகலா களத்தில் இறங்கியிருப்பது அதிமுகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.