ADVERTISEMENT

ஜெ. சமாதி விசிட்: ட்விஸ்ட் கொடுத்த சசிகலா! 

11:17 AM Oct 15, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

எம்.ஜி.ஆரால் 1972இல் துவக்கப்பட்டு, ஜெயலலிதாவால் 2016வரை பாதுகாக்கப்பட்ட அதிமுகவுக்கு அக்டோபர் 17ஆம் தேதி பொன்விழா நாள். ஓராண்டுக்கான கொண்டாட்டம் பற்றி ஓ.பி.எஸ்.சும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள். ஆலோசனைக் கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, பொன்விழா ஆண்டில் அதிமுகவைக் கைப்பற்றுவேன் என சூளுரைத்திருக்கிறார் சசிகலா.

அதிமுக மற்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் கடந்த புதன்கிழமை (13.10.2021) கலந்துரையாடியிருக்கும் சசிகலா, சில அசைன்மெண்டுகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளார். அதுகுறித்து சசிகலா தரப்பில் விசாரித்தபோது, "சின்னம்மா சசிகலாவால் நலமும் வளமும் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர், பணி ஓய்வுக்குப் பிறகும் சின்னம்மாவுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள்; ஆலோசனைகளை வழங்குகிறார்கள். அதிமுக பொன்விழா ஆண்டு குறித்து சமீபத்தில் அவர்களுடன் சசிகலா விவாதித்திருக்கிறார்.

அப்போது ‘தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக சட்டமன்றத்தேர்தல் சமயத்தில் அறிவித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு அதனை வாபஸ் பெறும் வகையில் நடந்துகொண்டீர்கள். கட்சியை கைப்பற்றுவேன்; அதிமுக நம்மிடம் வரும் என்றெல்லாம் அதிமுக நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோக்களை வெளியிட்டீர்கள். அந்தப் பேச்சு உங்கள் விசுவாசிகளிடம் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், சில நாட்கள் பரபரப்புக்குப் பிறகு அதுவும் ஓய்ந்துவிட்டது. நீங்களும் அமைதியாகிவிட்டீர்கள். அரசியலில் அமைதியாக இருப்பது பலவீனம். உண்மையிலேயே அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் உங்களின் மௌனத்தைக் கலைத்துவிட்டு வெளியே வாருங்கள்’ என அட்வைஸ் செய்திருக்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

இதனையடுத்து ஒரு முடிவுக்கு வந்த சின்னம்மா, கட்சியின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, ‘கரோனா கட்டுப்பாடுகளால்தான் நான் அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். அதிமுகவின் பொன்விழா ஆண்டு என்பதால் விமரிசையாக செய்ய வேண்டும். நான் அமைதியாக இருப்பதைப் பலவீனமாகிவிட்டதாக துரோகிகள் (எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள்) நினைக்கிறார்கள். 'நான் யார் என்பதைக் கட்சியின் பிறந்தநாளில் காட்டப்போகிறேன்' என சொல்லி சில முடிவுகளை எடுத்துள்ளார் சின்னம்மா சசிகலா'' என்று சுட்டிக்காட்டினார்கள்.

தனது மௌனத்தைக் கலைக்க முடிவு செய்திருக்கும் சசிகலா, அதிமுகவின் பிறந்தநாளில் (அக்டோபர் 17ஆம் தேதி) ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதாக முடிவுசெய்தார். ஆனால், அன்றைய தினம் ஓபிஎஸ்., இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் ஜெயலலிதா சமாதிக்கு வருவார்கள். இரு தரப்புக்கும் மோதல் வரலாம் அல்லது சசிகலா செய்தியைவிட அதிமுக தலைவர்களின் செய்தியை ஊடகங்கள் பெரிதாக பிரம்மாண்டப்படுத்தலாம். அதனால், முதல்நாளே (அக்டோபர் 16ஆம் தேதி) ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வோம் என தீர்மானித்தார் சசிகலா.

மறுநாள் கட்சியின் பிறந்தநாளில் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கும், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லத்துக்கும் செல்வது என முடிவு செய்யப்பட்டது. ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர். இல்ல வளாகத்திலிருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு (சசிகலா அமைத்தது) மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு, அதே வளாகத்திலுள்ள காது கேளாதோர் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து சில நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முடிவு செய்திருக்கிறார்.

சிறையிலிருந்து இந்த வருடம் துவக்கத்தில் விடுதலையாகி சென்னைக்கு வந்த அவர், வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று வழிபடுவார் என சொல்லப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக பெருந்தலைகள் எல்லோரும் தன்னை சந்திக்க வருவார்கள்; அவர்களுடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தை வழிபடலாம் என அவர் போட்ட மனக்கணக்கும் பிழையாகிப் போனது. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியையும் அதிமுக இழந்ததால் சசிகலாவும் அமைதியானார். ஆடியோக்களை ரிலீஸ் செய்து தற்காலிக பரபரப்பை ஏற்படுத்தியதைத் தவிர வேறு எதையும் சசிகலாவால் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் மீண்டும் லைம்லைட்டிற்கு வரத் துடிக்கிறார் சசிகலா.

சிறைக்குச் செல்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் அடித்து சில சபதங்களை எடுத்த சசிகலா, அதை நிறைவேற்ற உறுதிகொள்ளும் வகையில் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்கிறார். அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்துவருகின்றன. தி.நகர் மற்றும் ராமாவரம் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அமமுக வைத்தியநாதனிடம் ஒப்படைத்துள்ளார் சசிகலா.

ஜெயலலிதா நினைவிடத்தில் வணங்கி மீண்டும் தனது அரசியலை துவங்கும் சசிகலா, கட்சியின் பொன்விழா ஆண்டில் அதிமுகவைக் கைப்பற்ற, தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகளை சந்திக்கும் பயணத்திட்டம் வகுக்கப்படவிருக்கிறது. கரோனா நெருக்கடிகளாலும் கட்டுப்பாடுகளாலும் ஒத்திவைக்கப்பட்டிருந்த அவரது சுற்றுப்பயணம் இந்த ஆண்டில் துவங்குகிறது.

இதுபற்றி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவிலுள்ள சசிகலா எதிர்ப்பு தலைவர்கள் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் 'சசிகலாவின் வருகை புயலாக மையம் கொள்ளுமா? புஸ்வாணமாகுமா? அல்லது வரவேமாட்டாரா? என்பதெல்லாம் விரைவில் தெரியும்' என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT