Advertisment

''நம் ஒரே நோக்கம்...'' - அமமுகவினருக்கு டி.டி.வி.தினகரன் அறிவுறுத்தல்

dddd

Advertisment

சசிகலாவின் கரங்களை வலுப்படுத்தி, ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை, அவரது காலத்து பொலிவுடன் மீட்டெடுத்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான தி.மு.க.வை தேர்தலில் வீழ்த்துவதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் கட்சியினருக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக சிங்கம்போல நின்று, ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு சரித்திர சாதனைகளைப் படைத்தவர் ஜெயலலிதா. அத்தகைய சிறப்போடு தமிழ்கூறும் நல்லுலகின் விளக்காக ஜெயலலிதா ஒளி வீசிடுவதற்குத் தன்னையே உருக்கிக்கொண்டு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. 33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் தோழியாக, தாயாக, எந்தநிலையிலும் மாறாத அன்போடும், எதிரிகளுக்கு கிஞ்சிற்றும் இடம்கொடுக்காத விசுவாசத்தோடும் ஜெயலலிதாவைக் காத்து நின்றவர் சசிகலா.

கடந்த மாதம் 27-ந்தேதி அவர் விடுதலையாகி தமிழகம் வருவதை ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களும், தமிழக தாய்மார்களும், பெரியோர்களும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் கொரோனா பாதிப்பால் தொடர் சிகிச்சை மற்றும் சுய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு சசிகலா வருகிற 8-ம் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் திரும்புகிறார். சசிகலா பூரண நலம்பெற்று தமிழகம் வருகிற அந்தத் தினத்தைத் திருவிழா போல கொண்டாட நாம் தயாராகி வருகிறோம்.

Advertisment

நம்முடைய வரவேற்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாவற்றிலும் யாருக்கும், எந்தவித இடையூறும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கர்நாடகாவில் உள்ள நமது கட்சியினர், அம்மாநில காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரவேற்பு ஏற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல தமிழக எல்லையில் தொடங்கி, சென்னை வரை வழிநெடுகிலும் திரண்டு, சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். அவற்றில் எல்லாம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன், சமூக இடைவெளி, முக கவசம் போன்றவற்றை மறந்துவிடக்கூடாது.

10 ஆண்டுகளாக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தீயசக்தியான தி.மு.க.வை வருகிற சட்டமன்ற தேர்தலில் தலையெடுக்கவிடாமல் செய்கிற தலையாய பணியை, காலம் நம்மிடம் வழங்கியிருக்கிறது.

தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நின்று சசிகலாவின் கரங்களை வலுப்படுத்தி, ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை, அவர் காலத்துப் பொலிவுடன் மீட்டெடுத்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான தி.மு.க.வை தேர்தலில் வீழ்த்துவதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ammk sasikala TTV Dhinakaran
இதையும் படியுங்கள்
Subscribe