Sasikala announced politics rally

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சசிகலா விடுதலையானார். அதன்பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிக்கை விடுத்தார். அதன் காரணமாக இனி அவர் அரசியலுக்கு வரமாட்டார் என பேசப்பட்டு வந்த நிலையில், அவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார். அதேசமயம், தேர்தல் முடிவுகள் வந்து அதிமுக தோற்றத்திற்கு பின் ஆன்மீக பயணத்தின் போது அதிமுக தொண்டர்களையும், அவரது அரசியல் ஆதரவாளர்களையும் சந்திக்கத் தொடங்கி தற்போது அவரது பயணங்களில் ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்குறித்தான விவாதங்கள் வலுவாக எழுந்துவர சசிகலா தனது சுற்றுப் பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், இதில் அவரது முந்தைய பயணங்கள் போல் ஆன்மீக தலங்களுக்கு செல்லாமல், அவரது பயணம் அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவது குறித்தே உள்ளது.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்படி, ஜூன் 26-ம் தேதி (நாளை) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன்.

பின்னர், அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்விஜி புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். ஆர்.கே.பேட்டையில் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறேன். பிறகு, அம்மையார்குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.