Skip to main content

சரத்பவார் - ஏக்நாத் ஷிண்டே திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Sarathpawar - Eknath Shinde surprise meeting; What is the background?

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சியாக நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். 

 

சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர். பல்வேறு திருப்பங்களுக்கு பின் பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார்.  துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவிந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. இதனையடுத்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். 

 

கூட்டணி உடைந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மத்திய பாஜக அரசை முழுமூச்சுடன் எதிர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது கூட,  "நாடாளுமன்றத் திறப்பு விழாவில், காலையில் நடந்தவற்றை பார்த்தேன்; நான் அங்கு செல்லாதது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். யாகத் தீ வளர்த்து, புரோகிதர்களை கொண்டு கிரகப் பிரவேசம் போல புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்துள்ளனர்; இவை நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்லும் செயல்" எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் பாஜக ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியது மகாராஷ்ட்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் தொண்டு நிறுவனத்தின் 75 ஆவது தினத்திற்கு முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டேவிற்கு சரத்பவார் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் மரியாதை நிமித்தமான சந்திப்பு என இருவர் தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்பிற்கு பின் அரசியல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

சரத்பவார் கட்சிக்கு புதிய தேர்தல் சின்னம் ஒதுக்கீடு!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Allotment of new election symbol for Sarathpawar party

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

மேலும் பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார் உட்பட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாஜக கூட்டணி அமைச்சரவையில் இணைந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையில் 2 அணிகளாக செயல்படத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, தங்களுக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார் மற்றும் அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இரு தரப்பு மனுக்களையும் விசாரித்து வந்த தேர்தல் ஆணையம் கடந்த 6 ஆம் தேதி (06-02-24) அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.

அதே சமயம் தேர்தல் ஆணையம் சரத்பவார் அணிக்கு புதிய கட்சி பெயரை தேர்வு செய்ய 3 விருப்பங்களை தாக்கல் செய்யுமாறு கால அவகாசம் வழங்கி இருந்தது. அதன்படி, சரத்பவார் தலைமையிலான அணி சார்பில், ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார்’, ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்ராவ் பவார்’ மற்றும் ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார்’ ஆகிய 3 பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், அவர்கள் வழங்கிய முதல் பெயரான ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார்’ என்ற பெயரை ஏற்று ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்திர பவார் கட்சியின் தேர்தல் சின்னமாக “மனிதன் கொம்பு இசைக்கருவியை ஊதுவது” (Man blowing Turha) போன்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 27 ஆம் தேதி 6 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில், ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார்’ என்ற பெயருடன் சரத்பவார் அணி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.