Salem ADMK member Suresh sent advocate notice to EPS and OPS

Advertisment

அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த மீனவர் அணி நிர்வாகி ஒருவர், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ். அதிமுகவில் சேலம் மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்துவந்தார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதாக ஜூலை 5ஆம் தேதி, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Salem ADMK member Suresh sent advocate notice to EPS and OPS

Advertisment

அவர் அளித்துள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது,“கடந்த 1991ஆம் ஆண்டுமுதல் என்னுடைய கட்சிக்காரர், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இருந்துவருகிறார். அவரை, மாவட்ட மீனவரணிச் செயலாளர் பொறுப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமித்தார்.

தற்போது அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு கொடுத்துள்ளீர். ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமான பிறகு 5.12.2016ஆம் தேதி தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தோம். 2017ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கே தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது.

ஆனால் கட்சி விதிகளில் இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கிக்கொண்டு, இவர்களாகவே நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதுகுறித்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

Advertisment

கட்சி விதிகளின் 35வது பிரிவு, உட்பிரிவு 12இன்படி, பொதுச்செயலாளருக்கு மட்டுமே ஒரு தொண்டரை நீக்க அதிகாரம் உள்ளது. எனவே, எனது கட்சிக்காரரை தாங்கள் கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. உங்கள் இருவருக்கும் அந்த அதிகாரம் இல்லை.

எனவே, 15 நாள்களுக்குள் எனது கட்சிக்காரரை நீக்கியது குறித்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.” இவ்வாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் சேலம் மாவட்ட அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.