Skip to main content

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை தேவை! அன்புமணி

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
anbumani ramadoss

 

 

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர மத்திய வெளியுறவு அமைச்சகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரஷ்யாவின் வோல்காகிராட் மாநிலத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த மாணவர்களுக்கு பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

 

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த விக்னேஷ், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் வோல்காகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தனர். வார விடுமுறையில் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்க சென்றபோது ஒரு மாணவர் நீரில் அடித்து செல்லப்படுவதை பார்த்த ஸ்டீபன், அந்த மாணவரைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் இரு மாணவர்களும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது.

 

கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் மருத்துவம் படிப்பதற்காக தங்களின் பிள்ளைகளை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் மருத்துவர்களாக திரும்பி வருவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்த பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் இந்த செய்தி எந்த அளவுக்கு பேரிடியாக அமைந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. அவர்களின் துயரத்தை பா.ம.க.வும் பகிர்ந்து கொள்கிறது.

 

ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க மத்திய வெளியுறவு அமைச்சகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.