publive-image

தமிழ்நாட்டில் கரோன தாக்கம் முழுமையாக குறையாத காரணத்தால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடுஅரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது, ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கூடாது, வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராகச் சென்று வழிபட்ட விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. வழிபட்ட விநாயகர் சிலைகளைக் கோயில்களின் சுற்றுப்புறத்திலும், வெளிப்புறத்திலும் வைத்துவிட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடுஅரசு தெரிவித்தது.

Advertisment

இதனைக் கண்டித்து பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “10,11,12ஆம் தேதி என மூன்று நாட்களுக்கு எங்கள் வீட்டு வாசலிலேயே சிலை வைப்பது தனிமனித உரிமை. வழிபடுவதற்கு அரசு எந்த தடையும் செலுத்த முடியாது. ஒரு லட்சம் விநாயகரை வீட்டு வாசலில் வைத்து வழிபடுவோம். ஒரே ஒரு ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அரசு அதிகாரிகளும், நமது முதலமைச்சரும் வெளியே வராமல், நாங்கள் நேரடியாக எதையும் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது கிடையாது. புதுச்சேரி, மஹாராஷ்ட்ரா போலகட்டுப்பாடுகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

publive-image

Advertisment

அதேபோல் சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனியாண்டவர் கோயில், வேதபுரீஸ்வரர் கோயில், இலந்தை முத்துமாரியம்மன் கோயில் மற்றும் மிண்ட் அங்காளம்மாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அமைச்சர் பி.கே. சேகர் பாபு நேற்று (06.09.2021) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது, “அரசியல் நடத்த பல்வேறு தளங்கள் உள்ளன. கடவுளின் பெயரைக் கொண்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர், கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. எனவே, சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்களில் குறைவான மக்கள் தொகை இருந்தும் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே, அது போன்ற சூழ்நிலையை இங்கு உருவாக்க வேண்டாம். வீட்டிலிருந்து விநாயகரை வழிபட்டாலும் மக்களுக்கு அவர் நிச்சயம் நன்மை செய்வார்” என தெரிவித்தார்.