Skip to main content

“10 அமாவாசை தான் உங்களுக்கு பீரீயட்” - ஆர்.எஸ்.பாரதி

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

RS Bharti's criticism of Senthil Balaji's house raid

 

கடந்த 8 நாட்களுக்கு மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில் இன்று சென்னையிலும் கரூரிலும் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்றது. கரூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அரசு இல்லத்தில் சோதனையானது நடைபெற்றது. அதேபோல் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்தியன் வங்கி அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக அவரது அறையில் சோதனையில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மு.க.ஸ்டாலின் சேலத்தில் அமித்ஷாவை நோக்கி பல கேள்விகளைத் தொடுத்தார்கள். அந்த கேள்விகளுக்கு அமித்ஷாவால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்கு மாறாக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு இங்கு சென்னையிலும் வேலூரிலும் பேசிச் சென்றுள்ளார். அதிமுக முன்னாள் தலைவர் பற்றி அண்ணாமலை பேசிய பேச்சு பற்றி இரண்டு நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றது என மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

 

செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கலாம். வேறு வேறு பதவிகளில் இருக்கலாம். அவர் மனிதர். அவரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அவரைப் பற்றி அறிந்துகொள்ள கூடிய உரிமை எங்களுக்கு இருக்கிறது. அவரைப் பார்த்து பேச வேண்டும் எனச் சொன்னதற்கு அதிகாரிகள் அனுமதிக்க முடியாது எனச் சொன்னார்கள். நாங்கள் உள்ளே வரவில்லை. அவர் இங்கு வரட்டும். நாங்கள் பார்த்துவிட்டு செல்கிறோம் எனச் சொன்னோம். 10 நிமிடத்தில் வருகிறோம் எனச் சொன்னார்கள். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகிறது இன்னும் வரவில்லை.

 

திட்டமிட்டு தமிழ்நாட்டில் திமுக மீது அவமதிப்பை உருவாக்க வேண்டும் என்று நோக்கத்தோடு சோதனை நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்திலும் சோதனை செய்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் நுழைவதற்கு முன் மாநிலத்தின் தலைமைச் செயலர் அனுமதி பெறவேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதையும் மீறி சோதனை நடக்கிறது. சோதனையை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இன்னும் உங்களுக்கு 10 அமாவாசை தான் பீரியட். அதற்குள் நீங்கள் ஆடவேண்டிய ஆட்டமெல்லாம் ஆடுங்கள். இன்னொரு அரசு வந்தால் உங்கள் மீதும் அது பாயும். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அது அழகல்ல” எனத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்