Advertisment

உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?  - ஆர்.எஸ்.பாரதி தாக்கு

R.S. Bharathi strongly condemn eps  AIADMK regarding Murugan conference

கட்சியின் பெயரிலேயே அண்ணாவை வைத்துக்கொண்டு அண்ணாவை மோசமாக விமர்சிக்கும் மாநாட்டில் பங்கு கொள்ள வெட்கமாக இல்லையா? என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக சாடியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் ‘அண்ணா’ பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர். அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ’அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள்.

Advertisment

உங்கள் தாயை, உங்கள் மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா? இன்றைக்கு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் வருமானவரித் துறை அமலாக்கத் துறை உள்ளிட்ட அதிகாரமிக்க முட்டை, அம்மிக் கல்லையே சுக்கு நூறாக்கும். ஆளுமையில்லாத அதிமுகவை மட்டும் அது விட்டு வைக்குமா?

R.S. Bharathi strongly condemn eps  AIADMK regarding Murugan conference

'நாட்டாமை' திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை போல முருகன் மாநாட்டில் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் மிக்சர் சாப்பிட வா போனீர்கள்? 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள். அதிமுகவின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா? அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? ’மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு’ எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அதிமுக!

1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறாத ஒரு சம்பவத்தைச் சொல்லி அண்ணாவை விமர்சித்தார் முன்னாள் தமிழக பாஜக தலைவர். அதற்கு எதிர்வினை ஆற்றிய அதிமுக இன்றைக்கு எங்கே ஓடி ஒளிந்து கொண்டது? நேற்று முருகன் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டால், இன்றைக்குக் கோவையில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார். அடுத்து நாக்பூரில் எடப்பாடி பழனிசாமி தஞ்சம் அடைவாரா?

விஜயதசமி விழாவிற்காக கன்னியாகுமரியில் 2024 அக்டோபர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியை அதிமுகவின் தளவாய் சுந்தரம் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததற்காக, தளவாய் சுந்தரத்தைக் கட்சிப் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். அடுத்த மாதமே அவரை சேர்த்துக் கொண்டார். அப்படியான நாடகம் கூட ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற எஸ்.பி.வேலுமணிக்கு நடக்கவில்லை. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க கையெழுத்து இயக்கம் நடத்திய போது அதில் கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பிறகு சேர்க்கப்பட்டார். இப்படியான பாஜக பாசக் காட்சிகள் முருகன் மாநாட்டிலும் அரங்கேறியிருக்கின்றன.

மதவாத - பிரிவினைவாத அரசியல் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க வட மாநிலங்களில் ராமரை வைத்து கலவரம் செய்த பாஜக, தமிழ்நாட்டில் முருகனை வைத்து கலவர விதையை முருகன் மாநாடு மூலம் தொடங்கியுள்ளது. இந்துத்துவக் கும்பல் மூட்டும் கலவரத் தீயிக்கு எண்ணெய் ஊற்றும் எடுபிடி வேலையை எடப்பாடி பழனிசாமி வெட்கமே இல்லாமல் செய்திருக்கிறார்.

“திராவிடம் பற்றி அறிஞர்களிடத்தில்தான் கேட்க வேண்டும்” என்று முன்பு சொன்னவர்தானே பழனிச்சாமி. அவர் இன்றைக்கு இந்துத்துவத்தில் முழுமையாக கரைந்துவிட்டார். திமுகவை எதிர்க்கும் மாநாடு என்கிற ஒரே காரணத்திற்காகத் திராவிடத்தை இந்துத்துவாவின் காலடியில் கொண்டு போய் வைத்துவிட்டார் பழனிசாமி. திராவிடத்தை மட்டுமா, பெரியாருக்கும் அண்ணாவுக்கு இழுக்கையும் அல்லவா தேடித் தந்துவிட்டார்.

எம்ஜிஆர் எதிர்த்த இந்து முன்னணியை இன்றைய அதிமுக சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது. 1982- ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் பற்றியும், இந்து முன்னணி குறித்தும் எம்ஜிஆர் 29.3.1982 அன்று சட்டப்பேரவையிலேயே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். “இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்’’ என்று அன்றைக்குச் சொன்னவர் எம்.ஜி.ஆர். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, ’சூரனை வதம் செய்த முருகா! திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா!’ என்றும் ’திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா முருக பக்தர்களே’ என்றும் இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டிற்கு ‘திராவிட’ என்ற பெயர் தாங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி வாழ்த்து தெரிவிக்கிறார். திராவிடத்தை அழிக்கும் மாநாட்டிற்குத் திராவிடத்தால் அமைச்சரானவர்கள் கலந்து கொள்கிறார்கள். திராவிடம் அழிந்தால், அதிமுகவும் சேர்ந்தே அழியும் என்று கூட தெரியாத அளவுக்கா பாழும் கிணற்றில் அதிமுக விழுந்து கிடக்கிறது.

திராவிட இயக்கத்தின் பெயரையும் அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரை எங்களது தலைவர் என்று கூறிக் கொண்டு, பாஜகவின் பாசிச அரசியலுக்குத் துணை போய்த் துரோகம் செய்திருக்கிறது அதிமுக. மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க நடக்கும் மாநாட்டிற்குத் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி அழகு பார்த்திருக்கிறார் துரோகி பழனிசாமி. கட்சியின் பெயரிலேயே அண்ணாவை வைத்துக்கொண்டு அண்ணாவை மோசமாக விமர்சிக்கும் மாநாட்டில் பங்கு கொள்ள வெட்கமாக இல்லையா?

முருகன் மாநாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆந்திரத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜகவின் முன்னாள் தலைவர்உள்ளிட்டோர் பேசிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை எல்லாம் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். வெறுப்பு பேச்சுகளை எல்லாம் அதிமுக ஏற்றுக் கொள்கிறது போல! “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிற அண்ணாவின் கூற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது.

தமிழ்நாட்டு மக்களிடம் பன்னெடுங்காலமாக நிலவி வரும் சமய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் குலைக்க வேண்டும் எனும் சதி நோக்கத்தோடு பாஜகவும் இந்து முன்னணியும் நடத்திய முருகன் மாநாடு, பாஜக என்ற பாசிச எதிரிகளை மட்டுமல்ல, அடிமை அதிமுக துரோகிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது. இந்தியாவிலேயே பாஜகவின் மதவெறி அரசியலுக்கு இடம் தராத ஒரே மண் தமிழ்நாடு. இங்கே எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் எனும் கலவர நோக்கத்தோடு, பல வித்தைகளை பாஜக காட்டினாலும் அவை படுதோல்வியையே சந்திக்கின்றன. அதற்குக் காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் தலைமையேற்று நடத்தப்பட்ட திராவிட இயக்கம்தான். அந்த இலட்சியப் பணியைத் தலைமையேற்று நடத்தி பாஜகவின் பாசிச அரசியலுக்கு எதிரான சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. பாஜகவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள்” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Anna admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe