/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fi-art_10.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச்சந்தித்து பேட்டியளித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rs-bharathi-art-pm_0.jpg)
அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அரசு தகுந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முன்பே முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளை அழைத்து போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து விவாதித்துள்ளார். கள்ளச் சாராய மரணங்களை வைத்து அதிமுக, பாஜகவினர் அரசியல் செய்கின்றனர். இந்தச்சம்பவத்தில் அரசியல் செய்யாமல் அரசியல் கட்சியினர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவம் எதிர்பாராத ஒன்று என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது குறித்து விவாதிக்க ஒத்துழைக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் விவாதிக்க தயாராக இல்லை. இந்த சம்பவத்தில் நிகழும் உயிரிழப்புகளை திட்டமிட்டு அரசியல் செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps-newsj-mic-art_2.jpg)
மதுவிலக்கு அமலில் இருந்ததால் தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆய்வு செய்தே மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. உண்மையை புரிந்துகொள்ளாமல் மத்திய நிதியமைச்ச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். வரலாறை முழுமையாக புரிந்துகொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச வேண்டும். கள்ளச்சாராய மரணத்துக்கு காரணமான மெத்தனால் புதுச்சேரியில் இருந்து வந்துள்ளதால் பாஜகவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரியது ஏன்?. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்துள்ளன. காவல்துறைக்கு அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே தமிழ்நாடு காவல்துறையை இழிவுப்படுத்தியுள்ள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி விவகாரத்தை அதிமுக, பாஜகவினர் பெரிதுப்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.
Follow Us