
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ள நிலையில், இந்த தீர்ப்பை தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று எடப்பாடி பழனிசாமி சொந்தம் கொண்டாடியுள்ளார். அத்துடன் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கும் அதிமுக, தன்னை தூயவன் போலக் காட்ட முயல்கிறது. முக்கியமான வழக்கில் கருத்து சொல்ல முயலும் போது நிர்வாகிகள் யாருடைய பெயரையும் பயன்படுத்தாமல் பொத்தாம் பொதுவாக ’அதிமுக அறிக்கை’ என வெளியிட்டிருக்கிறார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். 'நடுநிலையோடு சிபிஐ. விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது’ என சொல்லியிருக்கிறார்.
அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிந்ததுமே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு மூடி மறைக்க முயன்றது. திமுக உள்ளிட்ட கட்சிகள், மகளிர் அமைப்புகள், மாணவர்கள் எனத் தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்த நிலையிலும் பழனிசாமி அரசு வழக்கை சிபிஐ-க்கு மாற்றவில்லை.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு பொள்ளாச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சி இரண்டு நாள் கழித்து அதாவது மார்ச் 12-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு பழனிசாமி அரசு பரிந்துரைத்தது. வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க 14-ம் தேதி அரசாணை வெளியிட்டார்கள். அதன்படி சிபிஐ-க்கு மாற்றினார்கள் என்றால் இல்லை. வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்காமல் இழுத்தடித்தார்கள். ‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரிப்பது ஏன்?’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் 2019 மார்ச் 29-ம் தேதி கேள்வி எழுப்பியது. உடனே தமிழக அரசு வழக்கறிஞர் ’வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கும் பணி நடக்கிறது’’ எனச் சமாளித்தார்.
’பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் 2019 அக்டோபர் 16-ம் தேதி அறிவித்தது. இதனால்தான் வழக்கு நியாயமாக நடந்து முடிந்து, இன்றைக்குக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது. அந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதால் அதன் கறை தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சிபிஐ என்ற கேடயத்தைத் தூக்கிக் கொண்டு புனிதர் வேடம் தரிக்க முயல்கிறது அதிமுக. “சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால் குற்றவாளிகள் தண்டனை பெற்றிருக்கிறார்கள்’’ எனப் பெருமை அடிக்கும் அதிமுக அன்றைக்கு சிபிஐ எனச் சொல்லி எப்படியெல்லாம் நாடகம் ஆடியது என்பதை மக்கள் அறிவார்கள்.
புகார் அளித்த மாணவியின் சகோதரர் பூபாலனை குற்றவாளிகள் தரப்பு தாக்கியது. வழக்கை திரும்பப்பெற சொல்லி மிரட்டியது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை எல்லாம் போட்டு அரசாணை வெளியிட்டார்கள். இவையெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பை அச்சுறுத்த அன்றைக்கு இருந்த பழனிசாமி அரசு மேற்கொண்ட அஸ்திரங்கள்.
பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கில், ’வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் குறிப்பிடாத புதிய அரசாணையை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டப் பெண்ணின் பெயரைச் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பயன்படுத்திய காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரைப் பயன்படுத்தியதால் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 15-ம் தேதி உத்தரவிட்டது. இதெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பழனிசாமி ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்கள். அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.