Advertisment

ரூ. 2 ஆயிரம் பெறுவோர் பட்டியலில் 30 லட்சம் அதிமுகவினரை சேர்க்க முயற்சி: கே.எஸ்.அழகிரி 

eps

ஏறத்தாழ 30 லட்சம் அ.இ.அ.தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி விடப்பட்டிருப்பதாக உறுதியான, ஆதாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் மேலும்,

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இரண்டு ஆண்டுகால எடப்பாடி அரசின் சாதனைகள் குறித்து அனைத்து நாளேடுகளிலும் அதிக பொருட் செலவில் வண்ணமயமான விளரம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் நாள்தோறும் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், நியூட்ரினோ திட்டம், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம், நீட் தேர்வு, மத்திய உயர்கல்வி ஆணையம், மேகதாது அணைக்கட்டு என பல்வேறு முனைகளில் மத்திய பா.ஜ.க. அரசினால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மொத்தம் ஐம்பது உறுப்பினர்களை பெற்றிருக்கிற அ.இ.அ.தி.மு.க., மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து குரல் கொடுக்கிற துணிவற்ற அரசாக இருந்து வருகிறது. பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகளையோ, ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதினால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையான ரூபாய் 5300 கோடியை பெறுகிற நிலையிலோ எடப்பாடி அரசு இல்லை. இதுகூட எடப்பாடி அரசின் சாதனையாக கருதலாம்.

Advertisment

தமிழகத்தில் 2015 முதல் 2018 வரை ஏற்பட்ட வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றினால் உருவான பாதிப்பிற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி. இதில் நரேந்திர மோடி அரசு வழங்கியது வெறும் ரூபாய் 3,700 கோடி. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு புள்ளி விவரங்கள் தேவையில்லை. இதையும் எடப்பாடி அரசின் சாதனையாக சொல்லலாமா ?

அ.இ.அ.தி.மு.க. அரசு கடந்த ஏழு ஆண்டுகளாகவே ஜெயலலிதா முதற்கொண்டு எடப்பாடி வரை தவறான பொருளாதார கொள்கையை கடைப்பிடித்து வருகின்றனர். தமிழக அரசின மொத்த வருவாயை விட செலவினம் ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது. 2017-18 இல் கடன் சுமை ரூபாய் 3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக இருந்தது, 2018-19 இல் 3.55 லட்சம் கோடியாகவும், 2019-20 இல் 3 லட்சத்து 97 ஆயிரம் கோடியாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சமீபத்திய நிதிநிலை அறிக்கை கூறுகிறது. தற்போது நடப்பாண்டில் மட்டும் நிதி பற்றாக்குறை ரூபாய் 44 ஆயிரத்து 176 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடும் கடன் சுமையினால் மூழ்கும் கப்பலாக இருக்கிற தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பதற்கான வாய்ப்பே இல்லாத நிலை இருக்கிறது. தமிழக மக்களின் கடும் வெறுப்பிற்கு ஆளாகியுள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு அதிலிருந்து எப்படி மீள்வது என்ற குறுகிய சுயநல அரசியல் நோக்கோடு தேர்தலை மனதில் கொண்டு திட்டங்களை அறிவித்து வருகிறது. திவாலான நிலையில் உள்ள ஒரு அரசு வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டி வேலை வாய்ப்பை பெருக்க முடியாது. ஏறத்தாழ ஒரு கோடி படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எதிர்காலமே கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில் பரிதவித்து நிற்கின்றனர்.

ks azhagiri

இந்நிலையில் அடுத்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ரூபாய் 1200 கோடி ஒதுக்கீட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு நிதியுதவியாக தலா ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்று எடப்பாடி அரசு அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்கள் தான் உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் அவசர அவசரமாக எந்தவிதமான புள்ளி விவரமும் இல்லாமல் 60 லட்சம் குடும்பங்களை தேர்வு செய்கிற பணியில் அ.இ.அ.தி.மு.க. அரசும், கட்சியும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாதனை பட்டியலை விட வேதனை பட்டியலே மிஞ்சியிருப்பதால் இத்தகைய உத்திகளை அ.இ.அ.தி.மு.க. கையாளுகிறது.

ஆனால் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் 28.32 லட்சம் குடும்பங்கள் தான் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை திடீரென 60 லட்சமாக எப்படி உயர்ந்தது ? இதற்கு என்ன அளவுகோள் கையாளப்பட்டிருக்கிறது ? பொது விநியோக திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 60 லட்சம் குடும்ப அட்டைகளின் விவரப்படி 30 சதவீத குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி 10 இல் ஒருவர் தான் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பதாக உறுதி செய்ய முடியும்.

மேலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.2 கோடி. இதில் 11.28 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் 28 லட்சத்திலிருந்து 32 லட்சம் வரை தான் இருக்க முடியும் என்று உறுதி செய்யப்பட்;ட புள்ளி விவரம் கூறுகிறது.

இந்நிலையில், ஏறத்தாழ இந்த திட்டத்தின் மூலம் 30 லட்சம் அ.இ.அ.தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி விடப்பட்டிருப்பதாக உறுதியான, ஆதாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் வரிப் பணத்திலிருந்து வாக்கு வங்கியை விரிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் அ.தி.மு.க.வினரையே பகிரங்கமாக பயனாளிகளாக சேர்ப்பதற்கு எடுக்கப்படுகிற முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறேன். இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்படும்.

எனவே, வறுமைக்கோட்டிற்கு கீழாக வாழ்கிற மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ‘கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற முயற்சியில்” அ.இ.அதி.மு.க. ஈடுபடக் கூடாது. தமது கட்சியினரின் ஆதாயத்திற்காக அரசுப் பணத்தை தாரை வார்க்கக் கூடாது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள 60 லட்சம் பயனாளிகளின் பட்டியலை ஆன்லைனில் வெளியிடுவதோடு, கிராமசபை கூட்டங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Condemned plan government aiadmk Rs 2 thousand project KS Azhagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe