Skip to main content

ஈரோடு கிழக்கில் சாலை மறியல்; போலீசார் குவிப்பு

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

Road Blockade in Erode East; Police build up

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எஸ்டிபிஐ தொண்டர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜி புரம் பகுதியில் உள்ள காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரே எஸ்டிபிஐ தொண்டர்கள், இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் லுக்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இப்பள்ளியில் ஆறு வாக்குச் சாவடிகள் உள்ளன. ஏராளமான இஸ்லாமியர்கள் வாக்களிக்க வந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு வாக்காளரும் சுமார் வெகு நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க அனுமதிப்பார்கள் அதையும் அனுமதிக்கவில்லை. 

 

வயதானவர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் சக்கர நாற்காலி போன்ற வசதி எதுவும் இந்த பூத்தில் இல்லை. இது குறித்து கேட்டால், அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் வருவதற்கு கூட இந்த பள்ளியில் அனுமதி இல்லை. சுமார் 70 வயது மதிக்கத்தக்க சோபியா என்ற வயது முதிர்ந்த முஸ்லிம் பெண்மணி, பல மணி நேரம் காத்திருந்ததால் மயக்கம் அடைந்தார். இதேபோன்று பல முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிழலுக்காக பள்ளி வளாகத்தில் முதியவர்கள் இருந்தால் கூட அவர்களை போலீசார் துரத்துகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இதுபோன்று வாக்காளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஒன்றிய அரசை இதற்காக குற்றம் சாட்டுகிறோம்” என்றார்.

 

சாலை மறியல் செய்யப்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் அதிகாரிகளுக்கும் சாலை மறியல் செய்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பத்திரிகையாளர்கள் வாக்குச்சாவடி உள்ள பள்ளிக்குள் நுழைவதற்கும் அதிகாரிகள் தடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையை பத்திரிகையாளர்கள் காண்பித்தும் இவ்வாறு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சாலை மறியல் செய்வதாகக் கூறியதால் பின்னர் கூடுதல் எஸ்பி ஜானகிராமன் அவர்களை சமாதானப்படுத்தி பள்ளிக்குள் செல்ல அனுமதித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.