Skip to main content

ஆர்.கே.நகர் ஓட்டுக்கு ரூ.89 கோடி லஞ்சம்: வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை! ராமதாஸ்

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
Ramadossபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி கையூட்டு கொடுத்தது   தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள  செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றியமைக்கக் கூடிய வழக்குக்கு ஆட்சியாளர்களால் சந்தடி இல்லாமல் சாவுமணி அடிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

 

Vijay-bhaskar


இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 5 நாட்கள் முன்பாக ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 32 இடங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது. அதில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன்,  திண்டுக்கல் சீனுவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகிய எழுவர் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. அதனடிப்படையில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.
 

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி சென்னை மாநகரக் காவல்துறையில், யாருடையப் பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்ட வழக்கு தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் தந்திரமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் ஒற்றை நீதிபதி எம்.எஸ்.இரமேஷ் அமர்வில் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது. இதுவரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்த இந்த உண்மை, அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மற்றொரு மனுவின் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி நீதிபதிகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
 

தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்குக்கு யாருக்குமே தெரியாமல் மூடுவிழா நடத்தப்பட்டப்பட்டிருப்பது மன்னிக்க முடியாத நீதிப்படுகொலை ஆகும். அரசாங்க கோழி முட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும் என்பார்கள்.... அதேபோல், ஆட்சியாளர்கள் நினைத்தால் நீதி தேவதையின் இரு கண்களையும் நிரந்தரமாகவே மூடி, எந்த வழக்கையும் குழிதோண்டி புதைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு  யார் தரப்பில் எத்தகைய விளக்கம் அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க முடியாது; ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

 

highcourt chennai


இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பை மட்டும் குறைகூற முடியாது. காவல்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். பொதுவாக பெயர் குறிப்பிடப்படாமல் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது அதை ரத்து செய்யும்படி எவரும் கோர முடியாது. நரசிம்மன் என்பவர் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்குக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? என்ற வினாவை அரசு வழக்கறிஞர் எழுப்பியிருக்க வேண்டும்; அவர் எழுப்பாத பட்சத்தில் நீதிபதி வினவியிருக்க வேண்டும். ஆனால், இருவருமே அவ்வாறு செய்யாதது மிகவும் வியப்பளிக்கிறது.
 

வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டது குறித்த செய்தி வெளியானதுமே, அதனடிப்படையில் முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? என வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வினா எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஆணையிட்டிருப்பதாக கூறியிருந்தது. அதன்படி, முதல் தகவல் அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 5 அமைச்சர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், மூன்றாவது நபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்து இந்த வழக்கை ரத்து செய்ய வைத்திருக்க முடியாது. இது தேர்தல் ஆணையத்தின் கடமை தவறுதலாகும்.

 

eps


 

தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளுக்கும் இதே கதி தான் ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற இத்தகைய வழக்குகளில் தேர்தல் ஆணையத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் அல்லது வழக்கை கண்காணிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். இந்த இரண்டு ஏற்பாடுகளுமே செய்யப்படாததால் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்த அனைவருமே எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துக் கொள்கின்றனர். இப்போதும் இந்த ஓட்டையைப் பயன்படுத்தி தான் இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டிய முதல்வர் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர்.


விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆதாரங்களைக் கைப்பற்றிய வருமானவரித்துறையே அவர் மீதி நிதிமுறைகேடு வழக்குத் தொடர்ந்து தண்டித்திருக்க முடியும். ஆனாலும், ஏதோ காரணத்தால் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நீதியைக் காக்காது.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கொடுத்தவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சேர்த்து அந்த வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுப் பிரிவிடம்(சி.பி.ஐ) அரசு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'கள்ளச்சாராய சாவுக்கு எதற்கு 10 லட்சம்? மறுபரிசீலனை தேவை' - உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
nn

அண்மையில் கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்நிலையில் 'தமிழக அரசு சார்பாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது எப்படி?' என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக முகமது கோஸ் என்பவர் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'கள்ளச் சாராயம் குடிப்பது என்பதே முதலில் சட்டவிரோதமான செயல். அதில் உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது. தீ விபத்து, பேருந்து விபத்து போன்ற விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் தான் கொடுக்கிறார்கள். ஆனால் இதற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள். இவ்வாறு சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவது தவறு. கள்ளச்சாராயம் அருந்துவதை இது ஊக்குவிக்கும் செயல். எனவே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். 

Why give 10 lakhs to a counterfeiter liquor? Reconsideration required'-Supreme Court Question

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், '10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகமான தொகை. எப்படி இவ்வளவு அதிகமான தொகையை இழப்பீடாக கொடுத்தீர்கள்' என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். இந்தத் தொகையை வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து அரசு என்ன சொல்ல விரும்புகிறது என அறிய அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டு வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story

எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் உள்ள யாருக்கும்... எஸ்.ஜோயல் பதிலடி

Published on 15/10/2019 | Edited on 16/10/2019

 

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். கூட்டணிக் கட்சியான திமுக அங்கு தீவிரப் பணியாற்றி வருகிறது. நாங்குநேரி களம் எப்படி உள்ளது என திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயலை தொடர்பு கொண்டோம்.

 

நாங்குநேரி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
 

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
 

காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்காரர் என எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறாரே?
 

அதுபோன்ற எண்ணம் பொதுமக்களிடையே இல்லை. ஆளும் கட்சி மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. அதனை மறைக்க எடப்பாடி பழனிசாமி இதுபோன்று பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் செல்வாக்கான தொகுதி நாங்குநேரி. திமுக தலைமையிலான கூட்டணியினர் ஒன்றிணைந்து பணியாற்றுவதால் ரூபி மனோகரனுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. 
 

joel 

 

மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் என்றாலே திண்ணை பிரசாரம் தான் ஞாபகத்துக்கு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசுகிறாரே?
 

தேர்தலுக்காக வருபவர் இல்லை ஸ்டாலின். இளைஞரணித் தலைவராக அவர் இருந்தபோது தமிழ்நாட்டில் அவர் செல்லாத ஊர்களே கிடையாது. இளைஞரணியினர் அழைப்பை ஏற்று தமிழ்நாடு முழுவதும் சென்று திமுக கொடியை ஏற்றி வைத்துள்ளார். பட்டித் தொட்டி, கிராமங்கள் என எல்லா ஊர்களுக்கும் சென்ற இப்போதுள்ள ஒரே தலைவர் ஸ்டாலின்தான். எளிமையாக எல்லோருடனும் பேசுகிறார், பழகுகிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி பேசுகிறார்கள். 
 

திண்ணைப் பிரச்சாரம் எடப்பாடி பழனிசாமியால் பண்ண முடியாது. ஏனென்றால் அங்கு குறைகளை சொல்லுவார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமியால் பதில் சொல்ல முடியாது. திண்ணைப் பிரச்சாரம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி கிடையாது. திண்ணைப் பிரச்சாரத்திற்கு அவர் வந்தால் மக்களே விரட்டிவிடுவார்கள்.
 

திண்ணைப் பிரச்சாரம் செய்வதற்கு ஸ்டாலினுக்கு முழு தகுதி உள்ளது. அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவும், திமுக ஆட்சியில் என்ன செய்தோம், இனி என்ன செய்வோம் என்று சொல்லக்கூடிய தகுதி எங்கள் தலைவருக்குத்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் உள்ள யாருக்கும் திண்ணைப் பிரச்சாரம் செய்யக்கூடிய தகுதி இல்லை. 


 

 

17315 வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் வசந்தகுமார் வெற்றி பெற்றார். ரூபி மனோகரன் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்?

 

குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

திமுக இளைஞரணி பிரச்சாரம் எப்படி உள்ளது?
 

இளைஞரணியினர் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். உதயநிதி ஸ்டாலின் 17 மற்றும் 18ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அவர் வருவது திமுகவினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும்.