Retracted EPS; The next step taken by the OPS team

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அதிமுக தரப்பு இபிஎஸ் வேட்பாளர் தென்னரசுவின் வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 12 மணியளவில் நடைபெற இருந்த சூழலில் அது ஒத்திவைக்கப்பட்டு பிப்.7 தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டது.

தொடர்ந்து 4 ஆவது நாளாக வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக் கட்சிவேட்பாளர் இளங்கோவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த தேர்தலில் தனிப்பட்ட மனிதன் என்பதைவிட மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் என்ற முறையில் வெற்றி பெற வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அதுமட்டுமல்ல. திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணியை தொடருவதற்கும், ஈரோட்டிற்கு பல காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தமிழக முதல்வர் முனைப்போடு இருக்கிறார். மாவட்டத்தின் அமைச்சர் முத்துசாமி அவர்களோடு இணைந்து திருமகன் ஈரோட்டிற்கு செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு தயாரித்து வைத்துள்ளார். அதில் பலவற்றை நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ளவற்றைநிறைவேற்ற வேண்டும்” எனக் கூறினார்.

Advertisment

இந்நிலையில்,அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இரட்டை இலை சின்னம் கேட்டு ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கட்சியின் பெயர் அதிமுக எனக் குறிப்பிட்டுள்ள அவர் இரட்டை இலை சின்னத்தையும் கேட்டு தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்பாளரை பன்னீர்செல்வத்திற்கும் முன்னதாகவேஅறிவித்த எடப்பாடி பழனிசாமி தனது வேட்பாளரின் வேட்புமனுத் தாக்கலை ஒத்திவைத்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.