கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை பெரியார் அரசு கல்லூரியில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் முதலில் அறிவித்தனர். மறுநாள் காலையில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் விஜயலட்சுமிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

cuddalore

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். இதற்கிடையே குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக விஜயலட்சுமி பதவி ஏற்கும் விழா வாண்டராஜன்குப்பம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

6ஆம் தேதி காலை 10 மணிக்கு அவர் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் கிராம சேவை மையத்தின் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் 500 பேர் திரண்டு வந்து பதவி ஏற்பு விழா நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார், இது அரசு நடத்தும் விழா இதனை தடுக்க கூடாது. எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

தேர்தலில் ஜெயலட்சுமி தான் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிகாரிகள் குளறுபடியால் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன் கார்டு மற்றும் அரசு ஆவணங்கள் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதேபோல் விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட விளாங்காட்டுர் ஊராட்சி தேர்தலில் வீரமுத்து என்பவர் வெற்றி பெற்ற நிலையில் குளறுபடியாக பாலகிருஷ்ணன் என்பவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக வீரமுத்து தரப்பினர் தொடந்து போராட்டம் நடத்தி வந்தனர். பாலகிருஷ்ணன் பதவி ஏற்க கூடாது என வலியுறுத்தி வீரமுத்து மற்றும் ஆதரவாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு கற்களை வைத்து அலுவலகம் முன் அமர்ந்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். வீரமுத்துவின் மனைவி பெரியநாயகி அருகில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்தார். போலீசார் அவரை கீழே இறக்கி கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதேசமயம் அவசர அவசரமாக பாலகிருஷ்ணனுக்கு பதவி ஏற்பு விழாவை நடத்தி முடித்தனர் அதிகாரிகள். மேலும் வைரமுத்து மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் உட்பட 8 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதற்கிடையே ஜெயலட்சுமி மற்றும் வீரமுத்து தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.