Skip to main content

இட ஒதுக்கீடு வாய்ப்புகள் குறைவாகப் பெறுவது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமூகங்கள்தான் : ஈ.ஆர்.ஈஸ்வரன்!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

E.R.Eswaran KMDK

 

'இன்றைய இட ஒதுக்கீட்டு முறையில் வாய்ப்புகள் குறைவாகப் பெறுவது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமூகங்கள்தான்' என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இன்று தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு முறையில், 20 சதவீதம் இருக்கின்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது. 18 சதவீதம் இருக்கின்ற பட்டியலின மற்றும் மலைவாழ் மக்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமுதாயங்களைச் சார்ந்த 60 சதவீத மக்களுக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

 

கல்லூரி மேற்படிப்பு இட ஒதுக்கீடாக இருந்தாலும், அரசு வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த சமுதாய மக்கள்தான். ஆரம்ப காலங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இருந்த வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு காலகட்டங்களில் பறிக்கப்பட்டது. 

 

இதைப்பற்றிய விழிப்புணர்வும் தங்களுக்குள் ஒற்றுமையும் இல்லாத காரணத்தினால் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த சமுதாய மக்களுடைய உரிமைகளுக்காக தமிழகத்தில் கோரிக்கைகள் வலுவாக வைக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமுதாயங்கள் எல்லாம் ஒன்றுபட்டு தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடவில்லை என்றால், இன்னும் 10 ஆண்டுகள் கடந்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்ற சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் யாரும் காவல்துறை அதிகாரிகளாகவோ அல்லது அரசு அலுவலர்களாகவோ இருக்க மாட்டார்கள். 

 

நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் அதிகமாகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற காரணத்தினால், இந்தப் பிரிவைச் சார்ந்த இளைய சமுதாயம் நல்லதொரு எதிர்காலத்தைப் பெற முடியாமல் தவிக்கிறது. அரசு வேலைகளில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தனியார் வேலைகளுக்காகவும், வெளிநாட்டு வேலைகளுக்காகவும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சமூக நீதி என்பது அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்புகள் சமமாகக் கிடைப்பதாக இருக்க வேண்டும். தமிழக அரசு உண்மை நிலையைப் புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' இவ்வாறு கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

கொ.ம.தே.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK Allotment of a constituency to kmdk in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க. ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை கொ.ம.தே.க. போட்டியிட்ட நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த முறை நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போன்றே இந்த தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.