publive-image

உக்ரைன் - ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு சிறப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இக்குழு உக்ரைன் எல்லைக்கு சென்று தமிழ்நாட்டு மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துலா, எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா மற்றும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து மாணவர்களையும் பிரதமர் தலைமையில் உலக நாடுகளே வியக்கும்படி, தாயகம் மீட்கும் நடவடிக்கையை, மத்திய அரசின் மீட்புக்குழு சிறப்பாக செயல்படுத்தும் இந்த சிக்கலான வேளையில் தமிழகம் ஒரு தூதுக்குழுவை அனுப்ப என்ன தேவை?. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி என்று பல உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்கமுடியாமல் திகைத்து நிற்கும் வேளையில், தூதரக ராஜதந்திரத்தின் மூலம் போர்க்களத்தில் இருந்து நாட்டு மக்களை மீட்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.

Advertisment

இந்திய நாட்டின் உதவியை மற்ற நாடுகள் எல்லாம் நாடி வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் செய்யவேண்டிய முதல் பணியே பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, மாநிலத்தில் தேவையான உதவிகளை செய்வது தான். உன்னதமான நீட் தேர்வை, அரசியலாக்கி மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகி, தற்போது மாணவர்கள் பெரிதும் வரவேற்கும் நீட் தேர்வை உக்ரைன் போருடன் சம்பந்தப்படுத்தி, குழப்பத்தை அதிகரித்து வரும் முதலமைச்சர், மாநிலங்களுக்கு சம்பந்தமில்லாத மீட்பு நடவடிக்கையிலும் தலையிட்டு, மாணவர்களின் உயிரோடு விளையாட தி.மு.க. அரசு முடிவு செய்து, இதையும் அரசியலாக்கும் செயல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள வீரர்களுக்கும், மாணவர்கள் உயிருக்கும் இடையூறாகும்” என்று தெரிவித்துள்ளார்.