Skip to main content

ஓபிஎஸ் தரப்பு வைத்த கோரிக்கை; ஏற்றுக்கொண்டு செயல்படுத்திய நீதிமன்றம்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Request made by OPS; Accepted and implemented by the court

 

‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

 

வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்குமாறு பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு ஆகியவற்றை அவசர வழக்காக ஏற்று விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு நேற்று முன்தினம் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

 

அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம், அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

 

இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து தனி நீதிபதி வழங்கிய பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனும் உத்தரவை எதிர்த்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து, ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்த அதே நேரத்தில் இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

 

ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துள்ள மனுவில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. கட்சியின் விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தனி நீதிபதியின் தீர்ப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு தடை விதிக்கவும் தனி நீதிபதியின் உத்தரவிற்கும் தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரது வழக்குகளில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனு மட்டும் இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் முன்னிலையில் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மீதமுள்ள மூவர் தாக்கல் செய்த மனுக்களையும் ஒன்றாக ஓபிஎஸ் மனுவுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மணிஷங்கர் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அனைத்து மனுக்களையும் சேர்த்து நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்