Skip to main content

ஆளுநரின் செயலுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை; உறுதி காட்டும் முதலமைச்சர்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Re-action against Governor's action; The Chief Minister is assured

 

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தாக்கல் செய்த அறிக்கையின் படி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

இந்த தடை குறித்த சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இதில் சில விளக்கங்களைக் கேட்டிருந்தார். தொடர்ந்து டிசம்பர் 1 ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் 4 மாதங்கள் மசோதா கிடப்பில் இருந்த நிலையில், சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை எனக் கூறி சட்ட மசோதாவை அரசுக்கே மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும், அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசுக்கு அறிவுறுத்தி இருந்ததாகவும் தகவல் வெளியானது.

 

2 வாரங்களுக்கு முன்னர் மார்ச் 9 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2023 - 2024 நிதியாண்டிற்கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.  

 

சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை முடிவு செய்தது. இரண்டாம் முறையாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம் என்பதால் தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று கூடும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், ஆளுநர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு அரசு பதில் தந்து பேரவையில் விளக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.